தேடுதல்

இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 

புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம்

கன்னூர் ஆயர் Vadakumthala – இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கற்பனைக்கெட்டாத வேதனை மற்றும், துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் இக்கட்டான நிலையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை, இந்திய திருஅவைத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். 

ஆதரவின்றி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இரு வாரங்களுக்குள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்ப வழியமைக்கப்படவேண்டும், கோவிட்-19 தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் இரத்து செய்யப்படவேண்டும் என்று, இந்திய உச்ச நீதிமன்றம், ஜூன் 9, இச்செவ்வாயன்று மத்திய மற்றும், மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. 

இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணை குறித்து, ஜூன் 10, இப்புதனன்று யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Alex Vadakumthala அவர்கள், இந்த உத்தரவு சற்று தாமதமாக வந்தாலும், மிகவும் முக்கியத்துவம் பெற்றது என்று கூறினார்.

இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம், நடந்தே தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர், இவர்களில் குறைந்தது நூறு பேர் களைப்பு அல்லது விபத்துக்களால் சாலைகளில் இறந்துள்ளனர் என்றுரைத்த ஆயர் Vadakumthala அவர்கள், அரசு, கொள்ளைநோய் விதிமுறைகளைத் தளர்த்தியிருந்தாலும், பொதுவான போக்குவரத்து வசதிகள் தொடங்கப்படாததால், இன்னும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், துன்பநிலையிலேயே உள்ளனர் என்று தெரிவித்தார்.  

கேரளாவின் கன்னூர் மறைமாவட்ட ஆயராகிய, ஆயர் Vadakumthala அவர்கள், இந்த தொழிலாளர்கள், கற்பனைக்கெட்டாத வேதனை மற்றும், துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவலைத் தடைசெய்வதற்காக, கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட சமுதாய விலகல்  விதிமுறைகளால், இந்தியாவின் நாற்பது கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஏறத்தாழ பாதிப் பேர், வேலைகள், வாகனப்போக்குவரத்துகள் மற்றும், வருவாய் இன்றி துன்புற்று வருகின்றனர்.

இதற்கிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வாகனங்களை ஏற்பாடு செய்தால், கோவிட்-19 கிருமி பரவும் ஆபத்து உள்ளது என்று சொல்லி, அது குறித்த விண்ணப்பத்தை இந்திய உச்ச நீதிமன்றம், இதற்குமுன் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. (UCAN)

13 June 2020, 15:56