தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் ஐ.நா. நிறுவனத்தில் உரையாற்றுகிறார் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் ஐ.நா. நிறுவனத்தில் உரையாற்றுகிறார் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-27

திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், தனது தலைமைப்பணியில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் போன்று, தூதரக உறவுகளை உருவாக்குவதன் வழியாக, உலகிலுள்ள எல்லா நாடுகளுடனும் உரையாடல் இடம்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை புனித 6ம் பவுல்-9

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், திருப்பயண திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் மேற்கொண்ட ஒன்பது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்கள் அனைத்திலும், உலக அமைதிக்கும், சமுதாய நீதிக்கும் அழைப்பு விடுத்தார். உலகில் பசியும், எழுத்தறிவின்மையும் அகற்றப்படவும், எல்லாரும் கடவுளில் மனித உடன்பிறந்த உணர்வில் வாழவும், உலக அளவில் ஒத்துழைப்பு இடம்பெறவும் அழைப்பு விடுத்தார். இனிமேல் போரே வேண்டாம், ஒருபோதும் போர் வேண்டாம். முழு மனித சமுதாயத்தின் இறுதிநிலையை வழிநடத்துவது அமைதி ஒன்றே என்று, ஐ.நா. நிறுவனத்தில் ஓங்கி குரல் எழுப்பினார், திருத்தந்தை புனித 6ம் பவுல். இவர் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்பதற்குமுன், அருள்பணியாளராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், திருஅவையில், புலம்பெயர்ந்தோர் அமைப்பை மீண்டும் உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் படைவீரர்கள், யூதர்கள், ஃபாசிச கொள்கை எதிர்ப்பாளர்கள், பொதுநலக் கொள்கையாளர்கள், கம்யூனிசவாதிகள், ஜெர்மன் போர் வீரர்கள், உப இராணுவத்தினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் பலருக்கும் இந்த அமைப்பு புகலிடம் அளித்தது. அருள்பணி மொந்தினி அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் என்ற பெயரில், திருஅவையின் தலைமைப்பணிக்கு வந்தபின், 1971ம் ஆண்டில் இந்த பிறரன்பு அமைப்பை, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பாக மாற்றினார்.

அருள்பணி மொந்தினி அவர்கள், 1955ம் ஆண்டு சனவரி 5ம் தேதி, மிலான் பேராயராக பொறுப்பேற்றார். அச்சமயத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், புதிய பேராயர் ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி அவர்களை, தனது தனிப்பட்ட கொடையாக மிலானுக்கு வழங்குவதாக அறிவித்தார். பேராயர் மொந்தினி அவர்கள், மிலான் உயர்மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி பொறுப்பை ஏற்ற சமயத்தில், அந்த உயர்மறைமாவட்டத்தில், ஆயிரம் ஆலயங்களும், 2,500 அருள்பணியாளர்களும், 35 இலட்சம் கத்தோலிக்கரும் இருந்தனர். இவர், மிலானில் அறிவாளிகள், கலைஞர்கள் மற்றும், எழுத்தாளரோடு கூட்டங்கள் நடத்தி மகிழ்ந்தார். மேலும் இவர், மக்களின் புலம்பெயர்வு பிரச்சனை, பொருளியக் கோட்பாடு, கம்யூனிச கோட்பாடு போன்றவற்றைக் களைவதிலும், நற்செய்தி அறிவிப்பதிலும், புதிய முறைகளைக் கையாண்டார். மிலான் பேராயராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 6ம் பவுல் என்ற பெயரையும் இவர் தெரிவு செய்தார்.

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஆற்றிய உரையில், நவீன கலாச்சாரம், ஆன்மீக கோட்பாடுகளின் மீது எழுப்பப்படவேண்டும். ஏனெனில், அவையே, அக்கலாச்சாரத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமல்ல, அதற்குத் தூண்டுதலாகவும், அவை மீது ஒளியைப் படரவிடுவதாகவும் உள்ளன. இந்த உன்னத ஞானம் நிறைந்த இன்றியமையாத கோட்பாடுகள், இறைவனில் கொண்டுள்ள நம்பிக்கை மீதே இருக்க முடியும் என்று கூறினார், அக்காலத்தில் இரும்புத்திரைக்குப் பின்னால் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நிலையை முன்னேற்ற, கம்யூனிச அதிகாரிகளுடன் பல்வேறு நிலைகளில் உரையாடல்களை இவர் மேற்கொண்டார். 1966 மற்றும், 1967ம் ஆண்டுகளில், வத்திக்கானில், முன்னாள் சோவியத் யூனியன் அமைப்பின் வெளியுறவு அமைச்சர் Andrei Gromyko அவர்களையும், Nikolai Podgorny அவர்களையும் சந்தித்தார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், ஹங்கேரி, போலந்து மற்றும், ருமேனியா நாடுகளில், திருஅவையின் நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, தனது இறுதி மூச்சுவரை கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தினார். இவரது தலைமைப்பணி காலம், அரசியல், கலாச்சாரம், சமுதாய உறவுகள் போன்ற பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலமாக அமைந்திருந்தது. 1960களில் மாணவர் போராட்டம் வெடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் மனச் சோர்வில் வாழ்ந்த பழைய தலைமுறை, 1950களில், பாதுகாப்பான காலமாக உணர்ந்து வாழ்ந்தது. ஆனால் இளைஞர் அக்காலக்கட்டத்தை தன்னிறைவு, தேக்கநிலை மற்றும், சர்வாதிகாரமாக நோக்கினர். வருங்காலத்தில் போர்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு, தலைவர்கள் மிகச் சிறிதளவே நடவடிக்கை எடுப்பதாக, இளைஞர்கள் உணர்ந்தனர். சமுதாயத்தில் தங்களின் செல்வ வளத்தை வெளிப்படுத்துவதற்காக, வெளிப்படையாக இடம்பெற்ற நுகர்வுத்தன்மை மற்றும், ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் எதிர்கொண்ட சமுதாய அநீதி ஆகியவற்றையும் இளைஞர்கள் விரும்பவில்லை. எனவே இவற்றிற்கு எதிராகப் பல நாடுகளில் இளைஞர்கள் போராடத் தொடங்கினர். அதோடு, மாணவர்கள், வியட்நாம் போருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். 

இவற்றிற்கு நடுவே திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், கத்தோலிக்க திருஅவையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆற்றவேண்டியிருந்தது. இவர் தனது தலைமைப்பணியில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் போன்று, தூதரக உறவுகளை உருவாக்குவதன் வழியாக, உலகிலுள்ள எல்லா நாடுகளுடனும் உரையாடல் இடம்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவரின் தலைமைப் பணிக் காலத்தில், வெளிநாட்டுத் தூதரகங்கள் இருமடங்காயின.

17 June 2020, 14:20