தேடுதல்

Vatican News
புனித பூமியில் ஒரு திருப்பயணி புனித பூமியில் ஒரு திருப்பயணி   (AFP or licensors)

இந்நோய் காலத்தில், நீதி மற்றும் அமைதி குறித்த கேள்விகள்

சொந்த மண்ணை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாகலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களின் நிலையை மாற்றி, நம்பிக்கையை விதைக்கவேண்டியது, அனைத்துலக நாடுகளின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 நலப்பிரச்சினையால், வாழ்வு, மரணம் குறித்த அக்கறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நீதி மற்றும் அமைதி குறித்த கேள்விகள் காணாமல்போயுள்ளன என்ற கவலையை வெளியிட்டுள்ளனர், எருசலேமின் ஓய்வுபெற்ற கிறிஸ்தவ சபைத்தலைவர்கள்.
உலக அளவில் பாதித்துள்ள இந்நோய் குறித்த அக்கறையை தாங்களும் பகிந்துகொள்வதாகவும், இறைவனின் இரக்கத்தை வேண்டுவதாகவும் கூறும் இத்தலைவர்கள், பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர கட்டாயப்படுத்தப்படும் நிலைகள் குறித்த அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 குறித்த அக்கறை முக்கியமே எனினும், இந்த பிரச்சனையால், எருசலேமில் இரு இனங்களிடையேயே தொடர்ந்து நிலவிவரும் தீமைகள் மறக்கப்படக்கூடாது எனவும் விண்ணப்பித்துள்ளனர், இத்தலைவர்கள்.
எருசலேமின் முன்னாள் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைவர், பேராயர் Michael Sabbah, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் ஓய்வுபெற்ற ஆயர் Riah Abu El Assal, லூத்தரன் கிறிஸ்தவ சபையின் ஓய்வுபெற்ற ஆயர் Munib A. Younan ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், அனைத்துலக சட்டங்கள் மதிக்கப்படுவதற்கும், அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாலஸ்தீன மக்களின் சில பகுதிகளை இஸ்ராயேல் நாட்டோடு இணைக்கவும், பாலஸ்தீனப்பகுதியில் உள்ள இஸ்ராயேல் குடியிருப்புகளை அங்கீகரித்து ஏற்கவும் இஸ்ராயேல் பிரதமர் Benjamin Netanyahu, மற்றும், எதிர்க்கட்சித் தலைவர் Benny Gantz ஆகிய இருவருக்குமிடையே உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தும் கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
தாங்கள் எந்நேரத்திலும் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாகலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களின் நிலையை மாற்றி, நம்பிக்கையை விதைக்கவேண்டியது, அனைத்துலக நாடுகளின் கடமை எனவும் எடுத்துரைத்துள்ளது, எருசலேமின் முன்னாள் கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை.
புனித பூமியின் பிரச்சனைக்கு ஏற்கனவே தீர்வுகள் காணப்பட்டு, ஐ.நா. தீர்மானங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதையும், இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவை தனி நாடுகள் என பல நாடுகள் அங்கீகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பதே தங்கள் விண்ணப்பம் எனவும் மேலும் கூறியுள்ளனர். (AsiaNews)
 

22 June 2020, 13:02