தேடுதல்

Vatican News
சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி  

சென்னை: செவிலியர், துறவிகள், கோவிட்-19 நோயாளிகளுக்கு....

கோவிட்-19 கொள்ளைநோயால் தாக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அக்கிருமி தொற்றாமல் அனைவரையும் பாதுகாப்பதற்குமென, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம், நலவாழ்வு பணியாளர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சென்னையில், கோவிட்-19 கொள்ளைநோய் வேகமாகப் பரவிவரும் சூழலில்,  அந்நோயாளிகளுக்குப் பணியாற்றுவதற்கென, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் உருவாக்கியுள்ள நலவாழ்வு பணியாளர் குழுவிற்கு, செவிலியர் பணிக்கெனப் பயிற்சிபெற்ற அருள்சகோதரிகளைத் தந்து உதவுமாறு, துறவு சபைகளின் தலைவர்கள் மற்றும், மாநிலத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கிருமி கட்டுக்கடங்காமல் பரவிவருவதை முன்னிட்டு, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும், பொதுநிலை விசுவாசிகளின் நலவாழ்வு குறித்து அக்கறை கொண்டுள்ள சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம், இந்நோய்க் கிருமியால் தாக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அக்கிருமி தொற்றாமல் அனைவரையும் பாதுகாப்பதற்குமென, அந்த உயர்மறைமாவட்டம் நலவாழ்வு பணியாளர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

சென்னை-மயிலை பேராயர், ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்களின் வழிகாட்டுதலில், உயர்மறைமாவட்ட தலைமையகத்திலுள்ள ஒருசில அருள்பணியாளர்கள், மற்றும், சில மருத்துவ நிபுணர்களைக்கொண்டு, இந்தப் பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அக்குழுவில் இணைந்து பணியாற்ற, ஆர்வமுள்ள செவிலியர் பணிக்கெனப் பயிற்சிபெற்ற அருள்சகோதரிகள் தேவைப்படுகின்றனர் என்றும், சென்னை உயர்மறைமாவட்ட துறவிகள் அமைப்பின் தலைவர், சலேசிய சபையின், அருள்பணி தேவ ஜோ அவர்கள் கூறியுள்ளார்.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறவு சபைகளின் தலைவர்கள் மற்றும், மாநிலத் தலைவர்களுக்கு, பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்களின் சார்பில், அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள அருள்பணி தேவ ஜோ அவர்கள், மக்கள் தங்களை இந்த கொள்ளைநோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான அடிப்படை தகவல்களை வழங்குவதற்கு, இக்குழு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்ளைநோய் உருவாக்கும் நெருக்கடி நேரங்களில், உடனடியாக உதவும் வழிகளில் ஈடுபடவும், இக்குழு ஆராய்ந்து வருகிறது என்றும், இப்பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றவிரும்பும் செவிலியர்களின் பெயர்களை உடனடியாகத் தெரிவிக்குமாறும், துறவு சபைகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், அருள்பணி தேவ ஜோ.

கொரோனா கொள்ளைநோய் தாக்கத்தின் மூன்று கட்டங்களில் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ள அருள்பணி தேவ ஜோ அவர்கள், இக்கிருமியால் தாக்கப்படுகிறவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்குத் தயாராக இருக்குமாறு, துறவு சபைகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். (Ind.Sec/Tamil)

26 June 2020, 12:22