தேடுதல்

Vatican News
இந்திய காரித்தாஸ் அமைப்பு இணையதளம் வழியாக  நடத்திய கூட்டம் இந்திய காரித்தாஸ் அமைப்பு இணையதளம் வழியாக நடத்திய கூட்டம் 

கோவிட்-19: 80% புலம்பெயர்ந்த தொழிலாளரின் வருவாய் பாதிப்பு

கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாகக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு, புலம்பெயர்ந்தோர், குறுநில விவசாயிகள் உட்பட, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரிய அளவில் தாக்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட்-19 ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டபின், தங்களின் வருமானம் அதிக அளவு குறைந்துள்ளதாக, 80 விழுக்காட்டு, குறுநில விவசாயிகள் மற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அறிவித்தனர் என்று, காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

கோவிட்-19 சமுதாய விலகல் சூழலில், குறுநில விவசாயிகள் மற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து, இந்தியாவின் 10 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இவ்வாறு கண்டறிந்துள்ளது, இந்திய காரித்தாஸ் அமைப்பு.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், மாநில ஆயர் பேரவைகளின் தலைவர்கள், காரித்தாஸ் கிளை அமைப்புகளின் இயக்குனர்கள் ஆகியோருடன் இணையதளம் வழியாக, ஜூன் 6, கடந்த சனிக்கிழமையன்று கூட்டம் நடத்திய இந்திய காரித்தாஸ் அமைப்பு, தனது ஆய்வின் முடிவை அறிவித்துள்ளது.

தற்போதைய கொள்ளைநோயின் காரணமாகக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு, விவரிக்க இயலாத எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது என்றும், இது, புலம்பெயர்ந்தோர், குறுநில விவசாயிகள் உட்பட, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரிய அளவில் தாக்கியுள்ளது என்றும், காரித்தாஸ் கூறியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஏறத்தாழ 95.2 விழுக்காட்டினர், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர் என்றும், அவர்களில் ஏறத்தாழ 10.6 விழுக்காட்டினர், இந்த கொள்ளைநோயில் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்துள்ளனர் என்றும், ஆய்வில் தெரியவந்ததாக இந்திய காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.   

உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கார், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய பத்து மாநிலங்களில் காரித்தாஸ் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

12 June 2020, 13:59