தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ 

மற்றவர்கள் குறித்த அக்கறையுடன் பலர் வாழ்வது மகிழ்ச்சி

கர்தினால் சாக்கோ: தொற்றுநோய்க் காலம், மக்களின் ஆன்மீக, மற்றும், அறநெறி வாழ்வின் வளர்ச்சிக்கு வாய்ப்பை வழங்கும் காலம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19க்கு பின்னான காலம், கூடுதலான மனிதாபிமானம், மற்றும், உற்சாகம் நிறைந்த காலமாக விடிவதுடன், முதிர்ச்சியடைந்த மற்றும், ஆழமான விசுவாசத்தைக் கொண்டதாகப் பிறக்கவேண்டும் என, விசுவாசிகளுக்கு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ.

இந்த தொற்றுநோய்க் காலம், மக்களின் ஆன்மீக, மற்றும், அறநெறி வாழ்வின் வளர்ச்சிக்கு வாய்ப்பை வழங்கும் காலம் என, தன் மடலில் கூறியுள்ள கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், தற்போது உலக அளவில் இடம்பெற்றுவரும் சமூக இடைவெளியும், வீட்டு தனிமைப்படுத்தல்களும், மனித உறவுகளில் நல்மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என விரும்புவோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும், மனிதகுல ஒருமைப்பாடு அதிகரித்துள்ளதையும் இக்காலத்தில், மருத்துவர்களும், அருள்பணியாளர்களும், சுயவிருப்பப்பணியாளர்களும் ஆற்றும் பணிகளில் நேரடியாகக் காணமுடிகிறது என, தன் மடலில் கூறும் கர்தினால் சாக்கோ அவர்கள், மற்றவர்கள் குறித்த அக்கறையுடன் பலர் வாழத் துவங்கியுள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 என்பது, கடவுளின் தண்டனை என சிலர் கூறிவருவது, கடவுளே அன்பு, கருணை, நன்மைத்தனம் என்று கூறிய இயேசுவின் படிப்பினைக்கு எதிரானது எனவும், தன் செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் சாக்கோ.

அநீதி, பாகுபாடு, வேதனை போன்றவைகளால் துன்புறுவோர், மற்றும், மாற்றத்தை விரும்புவோர், இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுகள் குறித்து மீண்டும் மீண்டும் வாசித்துப் புரிந்துகொள்வது அவசியம் எனவும், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் சாக்கோ. (AsiaNews)

16 June 2020, 14:11