Westminster Abbey ஆலயத்தில் கிறிஸ்தவத் தலைவர்கள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட் 19 கொள்ளைநோயால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு நீங்கி, ஜூன் 15 இத்திங்களன்று, இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற Westminster Abbey ஆலயம் மீண்டும் திறக்கப்பட்ட வேளையில், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களும், ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், இவ்வாலயத்திற்குச் சென்று செபித்தனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
பிரித்தானிய அரசு ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, Westminster Abbey ஆலயம் மக்களின் தனிப்பட்ட செபங்களுக்காக திறந்துவிடப்பட்டதையடுத்து, இவ்விரு கிறிஸ்தவ தலைவர்களும் அவ்வாலயத்திற்கு ஒரே நேரத்தில் சென்று செபித்தனர்.
இவ்விருவரையும் வரவேற்ற இவ்வாலயத்தின் பொறுப்பாளர், David Hoyle அவர்கள், இத்திங்களன்று இந்த ஆலயத்தை திறந்த வேளையில், "அமைதி இவ்வில்லத்திற்கு உரித்தாகுக" என்ற சொற்களுடன் இது திறக்கப்பட்டது என்று கூறினார்.
இறைவனுக்கு முன் செபிக்கும் வேளையில், நம்மிடையே உள்ள பாகுபாடுகள் அனைத்தும் மறைகின்றன என்பதை, இவ்விரு தலைவர்களும் இணைந்து வந்து செபித்தது உணர்த்துகிறது என்று, Hoyle அவர்கள், எடுத்துரைத்தார்.
அரசின் ஆணைகளுக்கு உட்பட்டு, மார்ச் மாத இறுதியிலிருந்து Westminster Abbey ஆலயம் மூடிவைக்கப்பட்டிருந்தாலும், மக்கள், இவ்வாலயத்தின் முன்புறமுள்ள சதுக்கத்தில் வந்து கூடுவதும், இந்த ஆலயத்தின் வலைத்தளம் வெளியிட்டு வந்த வாசகங்களையும், கருத்துப் பகிர்வுகளையும் மக்கள் பின்பற்றுவதும் நிகழ்ந்து வந்தன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. (ICN)