தேடுதல்

Vatican News
கான்டர்பரி ஆங்லிக்கன்  போராயர் ஜஸ்டின் வெல்பி கான்டர்பரி ஆங்லிக்கன் போராயர் ஜஸ்டின் வெல்பி  

West Bank இணைப்பிற்கு இங்கிலாந்து கிறிஸ்தவ தலைவர்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் வன்முறையின்றியும், ஒருவருக்கொருவர் வன்முறை அல்லது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலின்றியும் வாழ்வது மிகவும் முக்கியம் – இங்கிலாந்து கிறிஸ்தவத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனாவின் மேற்கு கரை (West Bank) பகுதியை இணைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு, இங்கிலாந்தின் முக்கிய கிறிஸ்தவத்  தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களும், கான்டர்பரி ஆங்லிக்கன்  போராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும் இணைந்து, ஜூன் 12, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள மடலில், இஸ்ரேல் அரசு, ஜூலை முதல் தேதிக்குப்பின், பாலஸ்தீனாவின் மேற்கு கரை (West Bank) பகுதியை இணைப்பதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சியையும், தாங்கள் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

இவ்விரு கிறிஸ்தவத் தலைவர்களும் எழுதியுள்ள இம்மடலை, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும், பிரித்தானியாவிலுள்ள இஸ்ரேல் தூதர் Mark Regev அவர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் வன்முறையின்றியும், ஒருவருக்கொருவர் வன்முறை அல்லது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலின்றியும் வாழ்வது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், மேற்கு கரைப் பகுதியை இணைப்பதால் அல்ல, மாறாக, உரையாடல் வழியாகவே, இவ்விரு நாட்டினரும், அமைதி மற்றும் பாதுகாப்பில் வாழமுடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருப்பீடமும், இஸ்ரேலும், பாலஸ்தீனாவும் இரு நாடுகளாக வாழ்வதற்கு தனது ஆதரவையும் வழங்கியுள்ளதோடு, 1967ம் ஆண்டுக்குமுன், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் புதிய ஆளும் கூட்டணி அரசின் வாக்குறுதியின்படி, பிரதமர் Benjamin Netanyahu அவர்கள், மேற்கு கரையை ஜூலை முதல் தேதி இஸ்ரேலுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஏறத்தாழ 3 விழுக்காடு  மேற்கு கரை பகுதி வரை, இஸ்ரேல் அரசு, தனது இறையாண்மையை நீட்டிக்கும் என்று சொல்லப்படுகின்றது. இப்பகுதியில், ஏறத்தாழ 4 இலட்சத்து ஐம்பதாயிரம் இஸ்ரேல் மக்கள், 132 குடியிருப்புக்களில் வாழ்ந்து வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. (CNA)

13 June 2020, 15:51