தேடுதல்

Vatican News
இனவெறிக்கு எதிராக கானடாவில் இடம்பெற்ற போராட்டம் இனவெறிக்கு எதிராக கானடாவில் இடம்பெற்ற போராட்டம்   (AFP or licensors)

மனித உரிமைகளை மீறுவது, இறைவனுக்கு எதிரான குற்றம்

கனடா ஆயர்கள் : இனவெறி எனும் பாவத்தின் விளைவாக உயிரிழந்துள்ள அனைவருக்காகவும் செபிப்பதோடு, உலகம் முழுவதும் ஒப்புரவு, அமைதி, மற்றும், நீதி நிலவ செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இனவெறிகளும், இனப்பாகுபாட்டு நிலைகளும், அழிவுதரும் வன்முறைகளும் சமுதாயத்தில் தொடர்ந்து இடம்பெற்று  வருகின்றன என்பதை அண்மை நிகழ்வுகளில் கண்ட அரசுகள், அவற்றை அகற்றும் நல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, கனடா ஆயர் பேரவை.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க-அமெரிக்க மனிதர், காவல்துறையினரால் கொல்லப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்தும் தங்கள் கவலையைத் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள கனடா நாட்டு ஆயர்கள், கடவுள் வழங்கிய மனித உரிமைகளை, குறைவாக மதிப்பிடல், மனித சமுதாயத்தை தரக்குறைவாக நடத்துதல், இனவெறியும் பாகுபாட்டு நிலைகளும், பிறரை மதிக்காமை போன்றவை, எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறியுள்ளனர்.

ஒவ்வொரு மனித வாழ்வின் புனிதத்தன்மையைக் காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டே, இனவெறிகளையும் பாகுபாடுகளையும் குறித்து கண்டும் காணாமல் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளை, தங்கள் அறிக்கையில் மேற்கோளாகக் காட்டியுள்ள ஆயர்கள், கடவுளின் சாயலால் படைக்கப்பட்ட மனிதரின் உரிமைகளை மீறுவது, இறைவனுக்கு எதிராகச் செய்யும் குற்றம் என மேலும் கூறியுள்ளனர்.

தன்னைப்போல் பிறரையும் அன்புகூர வேண்டும் என்பதை, நம் விசுவாசம் நமக்கு கற்பிக்கிறது எனக் கூறும் ஆயர்கள், இனவெறி எனும் பாவத்தின் விளைவாக உயிரிழந்துள்ள அனைவருக்காகவும் செபிப்பதோடு, உலகம் முழுவதும் ஒப்புரவு, அமைதி, மற்றும், நீதி நிலவவேண்டும் என செபிக்குமாறும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். (ICN)

09 June 2020, 13:16