தேடுதல்

Vatican News
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவு திருப்பலி இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவு திருப்பலி  (AFP or licensors)

பிலிப்பீன்சில் நான்கு இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் Allan Morris Abua, Danille Chad Pecson, Matt Jason Molina, Roy Joel Roscal ஆகிய நால்வரையும் இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக நியமித்துள்ளார். இவர்கள் அனைவரும், அந்நாட்டின் Pangasinan மாநிலத்தின் Lingayen-Dagupan உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில், இறைஇரக்கத்தின் மற்றும் மன்னிப்பின் மகிழ்வுச் செய்தியை அறிவிப்பதற்கு, நான்கு அருள்பணியாளர்களை, நியமித்திருப்பதற்கு, அந்நாட்டு தலத்திருஅவை நன்றி தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவில் (டிச.8,2015-நவ.20,2016) திருத்தந்தை வெளியிட்ட Misericordia et Misera என்ற திருத்தூது மடலின்படி, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவையில் இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, திருத்தந்தை மட்டுமே மன்னிக்கக்கூடிய சில பாவங்களை மன்னிப்பதற்கு, இந்த மறைப்பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் Allan Morris Abua, Danille Chad Pecson, Matt Jason Molina, Roy Joel Roscal ஆகிய நால்வரையும் இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக நியமித்துள்ளார். இவர்கள் அனைவரும், அந்நாட்டின் Pangasinan மாநிலத்தின் Lingayen-Dagupan உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.

சவுதி அரேபியாவில் பிலிப்பீன்ஸ் நாட்டவர் இறப்பு குறித்து

மேலும், சவுதி அரேபியாவில், அண்மையில் 350க்கும் அதிகமான பிலிப்பீன்ஸ் நாட்டுப் பணியாளர்கள் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அது குறித்த புலன்விசாரணை இடம்பெறுமாறு, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் மரணமடைந்துள்ள 353 பிலிப்பீன்ஸ் பணியாளர்களில், 200 சடலங்கள், பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று, சவுதி அரேபியாவின் பிலிப்பீன்ஸ் தூதர் Adnan Alonto அவர்கள், ஜூன் 22, இத்திங்களன்று கூறினார்.

இதையடுத்து, ஊடகங்களிடம் பேசிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு தலைவர், ஆயர் Ruperto Santos அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் இறப்புகள், வருங்காலத்தில் இடம்பெறுவதை தவிர்க்கும் நோக்கத்தில், சவுதியில், அண்மையில் இறந்துள்ளவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, புலம்பெயர்ந்த பணியாளர்களில் பலர், இயல்பான முறையிலும், சிலர் கொரோனா தொற்றுக்கிருமி காரணமாகவும் இறந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. (UCAN)

26 June 2020, 15:00