தேடுதல்

Vatican News
நீர் மேலாண்மை நிர்வாகத்தில் UNESCOவிடம் பாராட்டு பெற்ற ஜெர்மன் கிறிஸ்தவ கோவில்  நீர் மேலாண்மை நிர்வாகத்தில் UNESCOவிடம் பாராட்டு பெற்ற ஜெர்மன் கிறிஸ்தவ கோவில்   (AFP or licensors)

சுற்றுச்சூழல் குறித்த ஓராண்டு விழிப்புணர்வுத் திட்டம்

ஒவ்வொரு பங்குத்தளமும், ஒரு ஞாயிறைத் தேர்வு செய்து, அந்நாளில், இயற்கை, சுற்றுச்சூழல் போன்றவை குறித்த விழிப்புணர்வை வழங்குவதுடன், அதனை தொடர்ந்து கடைபிடிக்க விசுவாசிகளுக்கு உதவும் திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

படைப்புகள் குறித்த நம் அக்கறையையும், அவற்றைப் பாதுகாக்கவேண்டிய நம் கடமையையும் வலியுறுத்தும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் ஞாயிறு என்ற திட்டத்தை வகுத்துள்ளன, பிரித்தானியா மற்றும் அயர்லாந்து திருஅவைகள்.

CAFOD, Christian Aid உட்பட பல்வேறு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளுடன் இணைந்து கத்தோலிக்க மறைமாவட்டங்கள் வகுத்துள்ள இத்திட்டம், வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல், வரும் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை ஓராண்டிற்கு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில், ஒவ்வொரு பங்குத்தளமும், ஒரு ஞாயிறைத் தேர்வு செய்து, அந்நாளில், இயற்கை, சுற்றுச்சூழல் போன்றவை குறித்த விழிப்புணர்வை வழங்குவதுடன், அதனை தொடர்ந்து கடைபிடிக்க, விசுவாசிகளுக்கு உதவவேண்டும் என கூறியுள்ள ஆயர்கள், சுற்றுச்சூழல் ஞாயிறு திட்டத்திற்கு தேவையான உதவிகள், ஒவ்வொரு பங்குத்தளத்திற்கும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை நோக்கமாகக்கொண்ட வழிபாடுகள், செயல்பாட்டு அர்ப்பணம், தீமைதரும் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கத் தீர்மானித்தல், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான தீர்மானங்களை எடுக்க அரசுகளை வலியுறுத்தல், இவ்விவகாரத்தில் பிற கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து பணியாற்றுதல் என, பல்வேறு அம்சங்களை முன்வைக்கும் பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆயர்களின் திட்டம்,  இவ்வாண்டு செப்டம்பர் முதல் ஞாயிறன்று துவக்கி வைக்கப்பட்டு, 2021 செப்டம்பர் முதல் ஞாயிறன்று நிறைவுக்கு வரும்.

நம்முடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளால், நாம், எவ்வளவு தூரம், சுற்றுச்சூழலுக்கும், நம் சகோதர சகோதரிகளின் பொது இல்லமாகிய இப்பூமிக்கும் தீங்கிழைத்துள்ளோம் என்பதை உணரவும், அத்தவறுகளை சீர்செய்ய, தூண்டுதலைப் பெறவும், ஒவ்வொரு பங்குத்தளத்திலும், இந்த சுற்றுச்சூழல் ஞாயிறு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார், இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் ஆயர்களின் சுற்றுச்சூழல் துறையின் தலைவரான ஆயர் ஜான் அர்னால்டு.

2021ம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் Glasgow நகரில், ஐ.நா.வின் COP26 சுற்றுச்சூழல் பன்னாட்டு கருத்தரங்கு இடம்பெற உள்ளதை முன்னிட்டு, இத்தயாரிப்புத் திட்டம், பிரித்தானியா, மற்றும், அயர்லாந்து திருஅவைகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. (ICN)

08 June 2020, 14:26