தேடுதல்

Vatican News
அன்னை மரியாவின் ஓவியத்தைத் தாங்கி அமர்ந்திருக்கும் நற்செய்தியாளர் லூக்கா அன்னை மரியாவின் ஓவியத்தைத் தாங்கி அமர்ந்திருக்கும் நற்செய்தியாளர் லூக்கா 

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – தனித்துவமான அம்சங்கள்

நற்செய்தியாளர் லூக்காவைக் குறித்தும், அவர் உருவாக்கிய நற்செய்தியின் தனித்துவம் குறித்தும் ஒரு சில எண்ணங்களை முதலில் பகிர்ந்துகொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – தனித்துவமான அம்சங்கள்

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் பதிவாகியுள்ள புதுமைகளில் நாம் மேற்கொண்டுவரும் தேடல்களில், முதலில், இம்மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவானப் புதுமைகளில் கவனம் செலுத்தினோம். பின்னர், இம்மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரு நற்செய்திகளில் பொதுவானதாகக் காணப்படும் 5 புதுமைகளில் நம் தேடல்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நற்செய்தியிலும் தனிப்பட்ட முறையில் இடம்பெற்றுள்ள புதுமைகளில் கவனம் செலுத்தினோம். இந்த மூன்றாவது முயற்சியின் ஒரு பகுதியாக, மத்தேயு நற்செய்தியில் இரு புதுமைகளையும், மாற்கு நற்செய்தியில் இரு புதுமைகளையும் கடந்த சில வாரங்களாக சிந்தித்து வந்தோம்.

இன்று, ஏனைய மூன்று நற்செய்திகளில் பதிவாகாமல், லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள 5 புதுமைகளில் நம் தேடலைத் துவங்குகிறோம். இந்தத் தேடல் பயணத்திற்குத் தேவையான ஓர் அறிமுகமாக, நற்செய்தியாளர் லூக்காவைக் குறித்தும், அவர் உருவாக்கிய நற்செய்தியின் தனித்துவம் குறித்தும் ஒரு சில எண்ணங்களை முதலில் பகிர்ந்துகொள்வோம்.

கிறிஸ்தவ உலகில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 4 நற்செய்திகளில், லூக்கா நற்செய்தியும் ஒன்று. இந்த நற்செய்தியை எழுதியவரே, திருத்தூதர் பணிகள் நூலையும் எழுதினார் என்று, திருஅவைத் தந்தையர் (Church Fathers) கூறியுள்ளனர்.

கிரேக்க மொழி பேசுபவராகவும், புறவினத்தைச் சேர்ந்தவராகவும் கருதப்பட்டவர், லூக்கா. இன்னும் சில விவிலிய ஆய்வாளர்கள், லூக்காவை, கிரேக்க மொழிபேசும் யூதர் (Hellenistic Jew) என்று குறிப்பிட்டுள்ளனர்.

நான்கு நற்செய்தியாளர்களில், மத்தேயு, யோவான் ஆகிய இருவரும், இயேசுவின் திருத்தூதர்கள் என்பதை அறிவோம். மாற்கு, இயேசுவின் சீடராகவோ, அல்லது, சீடர் ஒருவரின் உறவினராகவோ இருந்தார் என்பது மரபு. லூக்கா ஒருவர் மட்டுமே, இயேசுவுடன் நேரடியானத் தொடர்பு ஏதுமின்றி இருந்தவர். எனவே, அவர் எழுதிய நற்செய்தி, பிறரிடமிருந்து கேட்டறிந்ததை தொகுத்து வழங்கியுள்ள ஒரு நூல்.

லூக்கா, தன் நற்செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ள சொற்கள், அவர், தன் நற்செய்தியை எவ்விதம் தொகுத்தார் என்பதைக் குறித்த ஒரு சில விவரங்களைக் கணிக்க உதவியாக உள்ளன:

லூக்கா நற்செய்தி 1:1-4

மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

இயேசுவின் வாழ்வை ‘தொடக்க முதல் நேரில் கண்டவர்கள்’, ‘இறைவார்த்தையை அறிவித்த ஊழியர்’ ஆகியோரிடமிருந்து ‘கருத்தாய் கேட்டறிந்தவற்றை ஒழுங்குபடுத்தி’ எழுதுவதே தன் குறிக்கோள் என்பதை, லூக்கா தன் நற்செய்தியின் ஆரம்பத்தில் தெளிவாக்கியுள்ளார். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து, அவர், திருமுழுக்கு யோவான், மற்றும், இயேசு ஆகிய இருவரின் பிறப்பைப்பற்றிய அறிவிப்பு நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளார். இவை, வேறு எந்த நற்செய்தியிலும் இடம்பெறாத நிகழ்வுகள். இவற்றைத் தொடர்ந்து, இயேசுவின் பிறப்பு குறித்த நிகழ்வுகள், மத்தேயு நற்செய்தியில் சிறிய அளவிலும், லூக்கா நற்செய்தியில் விரிவாகவும் பதிவாகியுள்ளன. நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள இயேசு பிறப்பு நிகழ்வுகளில், நாசரேத்தில் வாழ்ந்த இளம்பெண் மரியாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இயேசுவின் வாழ்வுடன் 'நேரடியானத் தொடர்பு கொண்டவர்களில்' மரியாவுக்கு ஈடானவர்கள் யாரும் கிடையாது என்பதை நாம் அறிவோம். எனவே, நற்செய்தியாளர் லூக்கா, மரியாவுடன் தங்கியிருந்து, அவர் கூறியவற்றை 'கேட்டறிந்து' கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை, தனித்துவம் மிக்க ஒரு பதிவாக உருவாக்கியுள்ளார். மேலும், லூக்கா ஓர் ஓவியர் என்பதும், அவர் மரியாவின் உருவத்தை முதன்முதலாக தீட்டியவர் என்பதும் மரபுவழி நம்மை அடைந்துள்ள மற்றொரு தகவல்.

தன் முதல் நூலின், அதாவது, நற்செய்தியின் தொடர்ச்சியாக, லூக்கா அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலை உருவாக்கினார் என்பதை, இந்நூலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்:

திருத்தூதர் பணிகள் 1:1-2

தெயோபில் அவர்களே, இயேசு... விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.

லூக்கா எழுதிய திருத்தூதர் பணிகள் நூலுக்கு, பெரும் உந்துசக்தியாக இருந்தவர் திருத்தூதர் பவுல் என்று சொன்னால், அது மிகையல்ல. திருத்தூதர் பவுலுடன் பலநாள்கள் வாழ்ந்து, அவரது பணிகளைப் பற்றிய விவரங்களை, திருத்தூதர் பணிகள் நூலில் பதிவு செய்துள்ளார், லூக்கா. இவரைக் குறித்து, திருத்தூதர் பவுல் தன் திருமடல்களில் மும்முறை குறிப்பிட்டுள்ளார்.

"கிறிஸ்து இயேசுவின் பொருட்டு என் உடன் கைதியாயிருக்கிற எப்பப்பிரா, என் உடன் உழைப்பாளர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா ஆகியோர் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்" (பிலமோன் 1:24) என்று, பிலமோனுக்கு எழுதிய திருமுகத்தில் பவுலடியார் கூறியுள்ளார். ஏனைய சீடர்கள், பணிகள் காரணமாகவோ, பிற காரணங்களுக்காகவோ தன்னைவிட்டு சென்றுவிட்ட வேளையில், "என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்" (2 திமொத்தேயு 4:11) என்று, திமொத்தேயுவுக்கு எழுதிய மடலில் பவுல் கூறியுள்ளார்.

அத்துடன், கொலோசேயருக்கு எழுதிய திருமுகத்தில், பவுலடியார், லூக்காவை ஒரு மருத்துவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். இத்திருமுகத்தின் இறுதியில், அவர், வாழ்த்துக்களைக் கூறும் வேளையில், "அன்பார்ந்த மருத்துவர் லூக்காவும், தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்" (கொலோ. 4:14) என்று கூறுகிறார்.

மருத்துவராக, ஓவியராகக் கருதப்படும் லூக்கா, கலைஞர்கள், மருத்துவர்கள், குறிப்பாக, அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மாணவர்கள், மற்றும் மணமாகாதவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.

அடுத்து, லூக்கா நற்செய்திக்கே உரிய ஒரு சில தனித்துவமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம். புதிய ஏற்பாட்டில், லூக்கா நற்செய்தியே மிக நீண்ட நூல் என்பது, இதன் முதல் தனித்துவம். மத்தேயு நற்செய்தியும், திருத்தூதர் பணிகள் நூலும் 28 பிரிவுகளைக் கொண்டிருந்தாலும், 24 பிரிவுகளைக் கொண்டுள்ள லூக்கா நற்செய்தி, இறைவாக்கியங்கள், சொற்கள் என்ற கணக்கீட்டில், 1151 இறைவாக்கியங்களையும், கிரேக்க மொழியில் 19,482 சொற்களையும் (ஆங்கிலத்தில் 25,900த்திற்கும் அதிகமான சொற்களையும்) கொண்டதாக, புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில், நீண்டதொரு நூலாக அமைந்துள்ளது.

அடுத்து, இந்நூலில் பதிவாகியுள்ள பல பகுதிகள், குறிப்பாக, திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசுவின் பிறப்பு, குழந்தைப்பருவம், நல்ல சமாரியர் உவமை, காணாமல்போன மகன் உவமை போன்றவை, ஏனைய நற்செய்திகளில் இடம்பெறாத அற்புதமான பகுதிகள். இயேசுவின் மனிதத்தன்மையை, குறிப்பாக அவரது கனிவை, உவமைகள் மற்றும் புதுமைகள் வழியே வெளிப்படுத்தும் லூக்கா நற்செய்தி, 'இரக்கத்தின் நற்செய்தி' என்று அழைக்கப்படுகிறது.

"யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்" (லூக்கா 1:5) என்று, தன் நற்செய்தியை ஒரு வரலாற்றுப் பதிவாகத் துவங்கும் லூக்கா, தொடர்ந்து, "அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்ட" (லூக்கா 2:1) வரலாற்று நிகழ்வைக் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, "திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். (லூக்கா 3:1) என்ற சொற்களில், இயேசு வாழ்ந்த காலத்தை அன்றைய வரலாற்று நாயகர்களுடன் இணைத்து, மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். இயேசு, மனித வரலாற்றின் ஒரு குறிப்பட்டக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதை நிலைநாட்ட, இந்த வரலாற்று விவரங்கள், பெரும் உதவியாக இருந்துள்ளன. இது, லூக்கா நற்செய்தியின் தனித்துவங்களில் ஒன்று.

லூக்கா நற்செய்தியில் காணப்படும் பல்வேறு அம்சங்களில், இறைவேண்டலுக்கும், ஆலய வழிபாட்டுக்கும் அவர் வழங்கியுள்ள முக்கியத்துவம், தனித்துவமான இடம் பெறுகிறது. இயேசுவின் பிறப்பு, மற்றும் குழந்தைப்பருவ நிகழ்வுகளுடன் தொடர்புடைய மரியா, செக்கரியா, சிமியோன் ஆகியோர் எழுப்பிய இறைவேண்டல்கள், கத்தோலிக்கத் திருஅவையில், அருள்பணியாளரும், துறவியரும் ஒவ்வொருநாளும் பயன்படுத்தும் செபங்களாக மாறியுள்ளன.

மற்ற நற்செய்திகளைக் காட்டிலும், லூக்கா நற்செய்தியில் இயேசு இறைவேண்டல் செய்த பல தருணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இயேசுவின் திருமுழுக்கு (3:21), திருத்தூதர்களைத் தெரிவு செய்த நேரம் (6:12-13), தோற்றமாற்றமடைந்த நேரம் (9:28-29) என்று, தன் வாழ்வின் பல முக்கியத் தருணங்களில் இயேசு இறைவனுடன் தொடர்பு கொண்டதைக் கூறும் நற்செய்தியாளர் லூக்கா, இறுதியில், தன் பாடுகளுக்கு முன், இயேசு, ஒலிவ மலையில் செபித்தார் (22:41,44-45) என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறைவேண்டலை மையப்படுத்திய மூன்று உவமைகள், லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 'நள்ளிரவில் வந்த நண்பர்' (11:5-8), 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' (18:1-8) மற்றும், 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற மூன்று உவமைகள் வழியே, இடைவிடாமல், மனம் தளராமல் செபிப்பதைக் குறித்த ஆழமான பாடங்களை, கிறிஸ்தவர்களுக்குத் தந்த பெருமை, லூக்காவையேச் சேரும். இந்த நற்செய்தியை, 'இரக்கத்தின் நற்செய்தி' என்று கூறுவதுபோல், 'இறைவேண்டலின் நற்செய்தி' என்றும் கூறுவது, மிகையல்ல.

லூக்கா நற்செய்தியின் இன்னும் சில தனித்துவமான அம்சங்களையும், இந்த நற்செய்தியில், தனிப்பட்ட முறையில் பதிவாகியுள்ள புதுமைகளையும் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

09 June 2020, 14:28