தேடுதல்

Vatican News
நற்செய்தியாளர் லூக்கா நற்செய்தியாளர் லூக்கா 

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – தனித்துவமான அம்சங்கள் 2

பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், இறைவன் அனைவருக்கும் பொதுவானவர், அவர் வழங்கும் மீட்பு அனைவருக்கும் உரியது என்ற கருத்துக்களும், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் தனித்துவமான அம்சங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – தனித்துவமான அம்சங்கள் 2

நற்செய்தியாளர் லூக்காவைக் குறித்தும், அவரது நற்செய்தியில் காணப்படும் தனித்துவமான அம்சங்களைக் குறித்தும், நம் தேடல்களை சென்ற வாரம் துவக்கிய நாம், லூக்கா நற்செய்தி, நீளமான ஒரு நூல், வரலாற்று குறிப்புகள் நிறைந்த நூல், இரக்கத்தின் நற்செய்தி, இறைவேண்டலின் நற்செய்தி என்ற நான்கு தனித்துவமான அம்சங்களை சிந்தித்தோம்.

லூக்கா நற்செய்தியில் காணப்படும் அடுத்த தனித்துவம் மிக்க அம்சம், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம். எலிசபெத்து, மரியா, இறைவாக்கினர் அன்னா என்ற மூன்று பெண்களை, இயேசுவின் குழந்தைப்பருவத்துடன் இணைக்கும் லூக்கா அவர்கள், தன் நற்செய்தி முழுவதிலும், பெண்களுக்கு, உயர்ந்ததோர் இடம் தந்துள்ளார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, இளம் பெண் மரியாவுக்குக் கிடைத்தது என்ற நிகழ்வை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே வாசிக்கும் நாம், அதற்கு அடுத்த நிகழ்வாக, மரியா, தன் உறவினரான எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றதைக் காண்கிறோம் (லூக்கா 1:39-56). இயேசுவின் பிறப்பைப் பற்றிய செய்தி, மரியாவுக்கு அடுத்ததாக, எலிசபெத்து என்ற மற்றொரு பெண்ணுக்கு கிடைத்தது என்பதை, லூக்கா, இந்நிகழ்வின் வழியே உணர்த்தியுள்ளார். உலகிற்கு மீட்பைக் கொணரும் ஒரு முக்கியச் செய்திக்கு, செக்கரியாவோ, யோசேப்போ முதல் சாட்சிகளாக இருப்பதற்குமுன், மரியா, எலிசபெத்து ஆகிய இரு பெண்கள் அதற்கு சாட்சிகளாக மாறினர்.

இயேசுவின் உயிர்ப்புக்கு, பெண்கள் முதல் சாட்சிகளாக இருந்தனர் என்ற விவரம், நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இயேசுவின் பிறப்பிற்கு முதல் சாட்சிகளாக இரு பெண்கள் விளங்கினர் என்ற விவரம், லூக்கா நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

ஏனைய நற்செய்தியாளர்கள், இயேசுவின் சீடர்களைப்பற்றி குறிப்பிடும்போது, ஆண்களின் பெயர்களை மட்டும் பதிவுசெய்துள்ள வேளையில், நற்செய்தியாளர் லூக்கா மட்டுமே, பெண் சீடர்களையும் குறிப்பிட்டுள்ளார்:

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும், ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும், சூசன்னாவும், மேலும் பல பெண்களும், அவரோடு இருந்தார்கள். இவர்கள், தங்கள் உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள் (லூக்கா 8:2-3)

இயேசுவுடன் பாசம்நிறைந்த உறவுகொண்டிருந்த மார்த்தா, மரியா (10:38-42), நயீன் ஊரில் கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்தல் (7:11-17), 18 ஆண்டுகளாக தீய ஆவியால் வதைபட்ட பெண்ணைக் குணமாக்குதல், (13:10-17), என்று, பெண்களை மையப்படுத்தியப் பகுதிகள், நற்செய்தியாளர் லூக்கா, பெண்களுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகின்றன.

அத்துடன், இயேசுவின் பாடுகள் வேளையிலும், நற்செய்தியாளர் லூக்கா, பெண்கள் ஆற்றிய பங்கை, மறவாமல் குறிப்பிடுகிறார். பிலாத்து, தலைமைக்குருக்கள், பரபா, படைவீரர் என்று, ஆண் வர்க்கத்தைச் சேர்ந்த பலர், இயேசுவின் பாடுகளில், எதிர்மறை விளைவுகளை உருவாக்கியதை நான்கு நற்செய்திகளிலும் வாசிக்கிறோம். இதற்கு ஒரு மாற்றாக, இயேசு சிலுவையைச் சுமந்து சென்ற வேளையில், சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற ஒருவர், இயேசுவுக்கு உதவி செய்ததாக ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் கூறப்பட்டுள்ளது (மத். 27:32; மாற். 15:21; லூக். 23:26). சீமோன் செய்த அந்த உதவியைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் லூக்கா மட்டும், எருசலேம் பெண்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

லூக்கா 23:27-28,31

பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்... பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!” என்றார்.

ஆணாதிக்கம் கொண்ட யூத சமுதாயம், இயேசுவுக்கு எதிராகத் திரண்டெழுந்த வேளையில், பெண்கள், இயேசுவுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதை, இந்நிகழ்வின் வழியே, நற்செய்தியாளர் லூக்கா மட்டுமே, வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளார்.

அனைவரும் சமம், அனைவருக்கும் மீட்பு உண்டு என்பது, லூக்கா நற்செய்தி வழியே உணர்த்தப்படும் மற்றுமொரு தனித்துவமான உண்மை. இறைவனைப் பொருத்தவரை, மனிதரிடையே, பாகுபாடுகள் கிடையாது என்பதையும், அவர் வழங்கும் மீட்பு அனைவருக்கும் பொதுவானது என்பதையும், ஏனைய மூன்று நற்செய்திகளைக் காட்டிலும், லூக்கா நற்செய்தி வலியுறுத்திக் கூறியுள்ளது.

குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்படைக்க, மரியாவும், யோசேப்பும், எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, குழந்தையை, தன் கரங்களில் ஏந்திய சிமியோன், மக்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீட்பை தான் கண்டுகொண்டதாகக் கூறுகிறார்:

லூக்கா 2:28, 30-31

சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே,... மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என்றார்.

யூத சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்டோருக்கு, இயேசு முதலிடம் தந்தார் என்பதையும், லூக்கா, தன் நற்செய்தியில், பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளார். எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியான இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தி, யூத சமுதாயத்தினரால், மக்கள் தொகை கணக்கிலும் இணைக்கப்படாத இடையர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது (லூக்கா 2:8-12). இந்நிகழ்வை, லூக்கா நற்செய்தியில் மட்டும் நாம் காண்கிறோம். தன் பிறப்பின் செய்தியை முதலில் பெறுவதற்கு, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்த குழந்தை இயேசு, பின்னர், தன் பணிவாழ்விலும், ஒதுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கியதை லூக்கா குறிப்பிட்டுள்ளார். நல்ல சமாரியர் உவமை, பரிசேயரும் வரிதண்டுவோரும் உவமை ஆகிய இரு உவமைகள் வழியே, யூதர்களால் இழிவாகக் கருதப்பட்ட சமாரியர்களுக்கும், வரிதண்டுவோருக்கும் இயேசு உயர்ந்ததொரு நிலையை வழங்கியுள்ளார் என்பதை லூக்கா நற்செய்தி மட்டுமே பதிவுசெய்துள்ளது.

அத்துடன், இயேசு, மனிதகுலம் அனைத்திற்கும் உரியவர் என்பதை, லூக்கா, தன் நற்செய்தியில் தெளிவாக்கியுள்ளார். மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் பதிவாகியுள்ள இயேசுவின் மூதாதையர் பட்டியல்களில் காணப்படும் வேற்றுமை, இதை தெளிவாக்குகிறது. மத்தேயு முதல் பிரிவில் கூறியுள்ள பட்டியலில் இயேசுவின் தலைமுறைகள், ஆபிரகாமிலிருந்து ஆரம்பமாகின்றன (மத்தேயு  1:1-17). இயேசு, ஆபிரகாமின் மகன், அதாவது, தேர்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் மத்தேயு அவரைச் சித்திரித்துள்ளார். இறைவன் வழங்கிய மீட்பர், உலகினர் அனைவருக்கும் உரியவர் என்பதை வலியுறுத்த, நற்செய்தியாளர் லூக்கா, 3வது பிரிவில் வழங்கியுள்ள மூதாதையர் பட்டியலில், இயேசுவை, ஆதாமின் மகனாக குறிப்பிட்டுள்ளார். (லூக்கா 3:23-38)

லூக்கா நற்செய்தியில் நாம் காணும் தனித்துவங்களை இவ்வாறு தொகுத்துக் கூறலாம்:

1. புதிய ஏற்பாட்டில், இறைவாக்கியங்கள், சொற்கள் என்ற கணக்கீட்டில், லூக்கா நற்செய்தியே மிக நீண்ட நூல் என்பது, இதன் முதல் தனித்துவம்.

2. இயேசு வாழ்ந்த காலத்தை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியுடன் வழங்குவதில், ஏனைய மூன்று நற்செய்தியாளர்களைக் காட்டிலும், லூக்கா தனி கவனம் செலுத்தியுள்ளார்.

3. திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசு பிறப்பு மற்றும் குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிகழ்வுகள், இயேசு கூறிய நல்ல சமாரியர் உவமை, காணாமல்போன மகன் உவமை போன்றவை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இயேசுவின் மனிதத்தன்மையை, குறிப்பாக கனிவை, வெளிப்படுத்தும் லூக்கா நற்செய்தி, 'இரக்கத்தின் நற்செய்தி' என்று அழைக்கப்படுகிறது.

4. இறைவேண்டல், பற்றிய உவமைகள், மற்றும், இயேசுவின் வாழ்வில் இறைவேண்டல் பெற்ற முக்கியமான பங்கு, லூக்கா நற்செய்தியில் முக்கிய இடம் பெற்றிருப்பதால், இதனை, 'இறைவேண்டல் நற்செய்தி' என்றும் அழைக்க முடியும்.

5. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், இறைவன் அனைவருக்கும் பொதுவானவர், அவர் வழங்கும் மீட்பு அனைவருக்கும் உரியது என்ற கருத்துக்களும், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் தனித்துவமான அம்சங்கள்.

இத்தகைய தனித்துவங்களைக் கொண்ட லூக்கா நற்செய்தியில், கூறப்பட்டுள்ள ஐந்து புதுமைகள், ஏனைய நற்செய்திகளில் இடம்பெறாத புதுமைகள். அவை, பின்வருமாறு:

1. கெனசரேத்து ஏரியில், பெருமளவு மீன்பிடிப்பு நிகழ்ந்த புதுமை - லூக்கா 5:1-11

2. நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்பெற்றெழச் செய்த புதுமை - 7:11-17

3. 18 ஆண்டுகளாக தீய ஆவி பிடித்த பெண்ணை குணமாக்கியப் புதுமை - 13:10-17

4. நீர்க்கோவை நோயுள்ள ஒருவரைக் குணமாக்கியப் புதுமை - 14:!-16

5. பத்து தொழுநோயாளரைக் குணமாக்கியப் புதுமை - 17:11-19

இந்த ஐந்து புதுமைகளுடன், கெத்சமனி தோட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை, லூக்கா நற்செய்தியின் ஆறாவது தனித்துவமான புதுமையாக, சிலர் குறிப்பிட்டுள்ளனர். கெத்சமனி தோட்டத்தில் இயேசு பிடிபட்ட வேளையில், அவருடன் இருந்த சீடர்களில் ஒருவர், வந்திருந்த தலைமைக்குருவின் பணியாளரை, தன் வாளால் தாக்கி, அவரது காதைத் துண்டித்தார் என்பதையும், அப்போது, இயேசு தன் சீடர்களைத் தடுத்ததையும், நான்கு நற்செய்திகளும் பதிவு செய்துள்ளன. நற்செய்தியாளர் லூக்கா மட்டுமே, அவ்விடத்தில், இயேசு, காயம்பட்டவரின் 'காதைத் தொட்டு நலமாக்கினார்' (லூக்கா 22:51) என்பதைக் குறிப்பிட்டுள்ளார். நாம் இப்புதுமையை தனிப்பட்ட ஒரு புதுமையாகக் கருதாமல், ஏனைய ஐந்து புதுமைகள் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம். இந்த ஐந்து புதுமைகளில் நம் தேடல் பயணம் அடுத்துவரும் வாரங்களில் தொடரும்.

16 June 2020, 12:15