தேடுதல்

Vatican News
நிறவெறிக்கு எதிரான ஊர்வலத்தில் ஒரு குருத்துவ மாணவர் நிறவெறிக்கு எதிரான ஊர்வலத்தில் ஒரு குருத்துவ மாணவர்   (AFP or licensors)

ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தினரின் உன்னத விண்ணப்பங்கள்

ஜார்ஜ் ஃபிளாய்ட் அடக்கம் செய்யப்பட்ட வேளையில், லாஸ் ஆஞ்செலஸ் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், 8 நிமிடம், 46 நொடிகளுக்கு மணிகளை ஒலிக்குமாறு, பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மின்னியாபொலிஸ் நகரில் மே 25ம் தேதி காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள், ஜூன் 9, இச்செவ்வாயன்று, அடக்கம் செய்யப்பட்ட வேளையில், தன் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும், 8 நிமிடம், 46 நொடிகளுக்கு மணிகளை ஒலிக்குமாறு, லாஸ் ஆஞ்செலஸ் பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்களின் மரணம் அர்த்தமற்றதாக மாறிவிடாமல் காப்பது நம் கரங்களில் உள்ளது என்று கூறிய அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் கோமஸ் அவர்கள், அவரது மரணம், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இனவெறியை முற்றிலும் ஒழிப்பதற்கு வழங்கப்பட்ட ஒரு தியாகமாக அமையட்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், லாஸ் அஞ்செலஸ் உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்களின் ஆன்ம நிறையமைதிக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்குமாறும், பேராயர் கோமஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

இதற்கிடையே, ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்களின் பிறப்பிடமான ஹூஸ்டன் நகரில் அவர் அடக்கம் செய்யப்பட்டதையடுத்து, கால்வெஸ்டன்-ஹூஸ்டன் பேராயரும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் முன்னாள் தலைவருமான கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள், "வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்" (மத்தேயு 7:5) என்ற நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இனவெறி, நம் கண்களில் இருக்கும் மரக்கட்டையாக இருப்பதை, உலகில் உள்ள அனைவராலும் காணமுடிகிறது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் டினார்டோ அவர்கள், இந்த குறைபாடு, அந்நாட்டின் திருஅவையிலும் நிலவுகிறது என்று எடுத்துரைத்தார்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொலையுண்டதும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பல்வேறு வன்முறை நிகழ்வுகளும், மற்றவர்களைப்போல் தன்னையும் வேதனையில் நிறைத்தது என்று கூறிய கர்தினால் டினார்டோ அவர்கள், இந்நாள்களில், ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்களின் குடும்பத்தினர், விடுத்து வந்த விண்ணப்பங்கள், குறிப்பாக, வன்முறைகளைக் களைந்து, நேர்மறையான மாற்றங்களைக் கொணர அவர்கள் விடுத்து வந்த அழைப்புக்கள் நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள வரம் என்று கூறினார். (CNA/ ICN)

10 June 2020, 15:34