தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டில்  போராட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் போராட்டங்கள் 

அமைதியான போராட்டத்திற்கு ஆயர்கள் அழைப்பு

இனம் அல்லது தோல் நிறத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான நம் சகோதரர் சகோதரிகள், இன்றும், மதிப்புக் குறைவாக, தாழ்வாக நடத்தப்படுகின்றனர், மாண்பின்றியும், சமத்துவ வாய்ப்புகள் இன்றியும் துன்புறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறை மற்றும், இனவெறிக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஹோசே கோமஸ் (Jose Gomez).

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minneapolis நகரில், மே 25, கடந்த திங்களன்று, 46 வயது நிரம்பிய ஆப்ரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் (George Floyd) அவர்கள், இரக்கமற்ற முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, போராடும் மக்கள், வெள்ளை மாளிகைக்குள்ளும் நுழைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

அந்நாட்டில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் பதட்டநிலை மற்றும், வன்முறை குறித்து, பெந்தக்கோஸ்து பெருவிழா மறையுரையிலும், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை  ஒன்றிலும், Los Angeles பேராயர் கோமஸ் அவர்கள், அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நம் தோல் நிறம், நாடு, இனம், மொழி போன்றவற்றைக் கடந்து, கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்றும், கடவுள் தம் பிள்ளைகளை, மிகவும் அன்புள்ள மகன்களாக, மகள்களாக நோக்குகிறார் என்றும் கூறிய பேராயர் கோமஸ் அவர்கள், இனவெறி ஒரு பாவம் என்றும் கூறினார்.

இனம் அல்லது தோல் நிறத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான நம் சகோதரர் சகோதரிகள், இன்றும், மதிப்புக் குறைவாக, தாழ்வாக நடத்தப்படுகின்றனர், மாண்பின்றியும், சமத்துவ வாய்ப்புகள் இன்றியும் துன்புறுகின்றனர் என்று கூறிய பேராயர் கோமஸ் அவர்கள், இதுவல்ல அமெரிக்காவின் வாழ்வுநிலை என்றும் குறிப்பிட்டார்.    

இன்று, நம் பிரச்சனைகளுக்கு வன்முறையற்ற வழியில் தீர்வு காணப்படவேண்டியது அவசியம் என்றும், அமைதியை உருவாக்குபவர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கூறினார். (CNA) 

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறை, இனவெறி, மற்றும், காவல்துறையின் மனிதப்பண்பற்ற முரட்டுத்தனமான செயலுக்கு எதிரான கண்டனத்தை தெரிவித்துள்ள உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் (WCC), மக்களுக்கு நீதி வழங்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2020, 13:58