தேடுதல்

ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர் ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர் 

ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் மீது கோவிட் 19ன் தாக்கம்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட் 19 கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள் ஏன் என்பதை, அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட் 19 கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள் ஏன் என்பதை, அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை, அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

கோவிட் 19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தோரில், வெள்ளையினத்தவர், மற்றும், இஸ்பானிய இனத்தவரைக் காட்டிலும், ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது, வேதனை தரும் உண்மை  என்றும், இதன் காரணங்களை அறிய அரசின் அதிகாரிகள் நாட்டளவிலும், மாநில அளவிலும் ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

கறுப்பின மக்கள், கட்டாயமாக, பணியிடங்களுக்கு செல்லவேண்டி இருப்பதும், தகுந்த பாதுகாப்பு இன்றி பணி புரிய வேண்டியிருப்பதும் அவர்கள் இந்த தொற்றுக்கிருமியின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதற்கு காரணங்கள் என்று, ஃபோர்டம் (Fordham) பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஒரு கருத்து சேகரிப்பில் தெரிய வந்துள்ளது.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கறுப்பின மக்கள் மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படும் சூழல்களில் வாழ்கின்றனர் என்றும், இவர்களில் கறுப்பினத்தவர் இன்னும் கூடுதலான ஆபத்து நிறை சூழல்களை சந்திக்கவேண்டியுள்ளது என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Shelton Fabre அவர்கள் கூறியுள்ளார்.

அண்மையப் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1,213,010 பேர் இந்தக் கிருமியால் நோயுற்றுள்ளனர் என்பதும், இவர்களில் 69,925 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும், 188,068 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

06 May 2020, 14:34