தேடுதல்

Vatican News
தூய ஆவியாரின் வருகை தூய ஆவியாரின் வருகை 

மே 31, இந்திய நாட்டிற்காக ஐக்கிய இறைவேண்டல் நாள்

பெந்தக்கோஸ்து பெருவிழாவை, நம்பிக்கை, இறைவேண்டல் மற்றும், இறைபுகழ்ச்சி நாளாகக் கொண்டாடுவோம்

மேரி தெரேசா :  வத்திக்கான் செய்திகள்

இந்திய திருநாட்டிற்காக இறைவேண்டல் செய்யும் அமைப்பும் (UCPI), தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவும் இணைந்து, மே 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் பெந்தக்கோஸ்து பெருவிழாவை, இந்திய நாட்டிற்காக, ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யும் நாளாகக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் கொரோனா கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் இந்நோய் மேலும் பரவாமல் இருக்கவும் இறைவேண்டல் மற்றும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்வேளை, மீண்டும் ஒருமுறை, இதே கருத்துக்காக, தேசிய அளவில் ஒரு நாளை அர்ப்பணிக்கத் தீர்மானித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நாளில் தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற எல்லா கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும், ஆலயங்களிலும், இல்லங்களிலும் இந்தியாவிற்காகச் செபிக்குமாறு, இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் ஆயர் இலாரன்ஸ் பயஸ் அவர்கள், தமிழகத் திருஅவைக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பெந்தக்கோஸ்து பெருவிழாவை, நம்பிக்கை, இறைவேண்டல் மற்றும், இறைபுகழ்ச்சி நாளாகக் கொண்டாடுவோம் என்றும், ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட  தூய ஆவிக்காக காத்திருந்த, அன்னை மரியா, மற்றும்,  திருத்தூதர்கள் போன்று, நாமும் நலம்தரும், ஆறுதல்தரும் மற்றும், புதுப்பிக்கும் ஆவியின் கொடைகளுக்காக காத்திருந்து மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவான இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு. எல்லா ஆலயங்களிலும், சிற்றாலயங்களிலும் மணிகளை ஒலிக்கச்செய்து, நமது ஆழமான எதிர்நோக்கை, நாட்டிற்குப் பறைசாற்றுவோம், அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் மற்றும், இறைபுகழ்ச்சியில் இணைந்து, இந்தியாவின் வளமான, நலமான வருங்காலத்திற்காகவும், கொள்ளைநோயால் தாக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் பூரண குணம்பெறவும், இறைவனை மன்றாடுவோம் என்றும் ஆயர் பயஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

மே 31 இஞ்ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் இந்த ஐக்கிய இறைவேண்டல் நாளைக் கொண்டாடும் முறை பற்றியும், ஆயர் பயஸ் அவர்கள், தனது அறிக்கையில் விரிவாக வழங்கியுள்ளார்.

ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு ஆலய மணிகளை ஒலிக்கச் செய்வோம், முடிந்தால் முன்பே பதிவுசெய்யப்பட்ட ஆலயமணி ஓசையை நம் இல்லங்களில் ஒலிக்கச் செய்வோம், ஆலய மணி ஓசையோடு, அல்லேலூயா கீதம் பாடி செப வழிபாட்டை ஆரம்பிப்போம், அதைத் தொடர்ந்து ஆவியாரின் வருகைக்காகச் செபிக்கும் தியானப்பாடல், அதன்பின்னர் பரிந்துரை வேண்டல்கள், பின்னர் இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல், இறுதியாக தூய ஆவியானவரின் பாடலுடன், இந்த இறைவேண்டலை நிறைவுசெய்வோம் என்று, ஆயர் பயஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆலயங்களில் செபக்கூகூட்டங்கள் நடத்த இயலாத இந்நாள்களில், அனைத்து இறைமக்களும், தங்கள் இல்லங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து இறைவேண்டலில் ஈடுபடுமாறும், செபவழிபாடு நடத்த இயலாதவர்கள், மாதா தொலைக்காட்சியோடு இணைந்து செபிக்க அழைக்கிறேன் என்றும், ஆயர் இலாரன்ஸ் பயஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (Indian Sec.Tamil)

30 May 2020, 14:08