தேடுதல்

Vatican News
அமேசான் பகுதி பழங்குடியினர் அமேசான் பகுதி பழங்குடியினர்   (AFP or licensors)

அமேசான் பகுதியைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள்

அமேசான் பகுதியில், இதுவரை கண்டிராத அளவுக்கு, கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கமும், கட்டுக்கடங்காமல் இடம்பெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளன - கர்தினால் Hummes

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை அச்சுறுத்தும் மனிதாபிமான மற்றும், சுற்றுச்சூழல் பெருந்துயர்களைத் தவிர்ப்பதற்கு, உடனடியான, ஒன்றிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று, REPAM அமைப்பு மே 18, இத்திங்களன்று வலியுறுத்தியுள்ளது.

 அமேசான் பகுதியில் வாழ்கின்ற மக்களின் உரிமைகளையும், மாண்பையும் பாதுகாப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலால் உருவாக்கப்பட்டுள்ள REPAM அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளது.

REPAM அமைப்பின் தலைவர் கர்தினால் Claudio Hummes அவர்களும், அதன் உதவித் தலைவர் கர்தினால் Pedro Barreto Jimeno அவர்களும், அதன் செயல்திட்ட செயலர் Mauricio López அவர்களும் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அமேசான் பகுதியை இருபெரும் சக்திகள் அச்சுறுத்துகின்றன என்று கூறிய கர்தினால் Hummes அவர்கள், இந்தப் பகுதியில் இதுவரை கண்டிராத அளவுக்கு, கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கமும், கட்டுக்கடங்காமல் இடம்பெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்று கூறினார். 

அமேசான் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள், எல்லாவற்றிற்கும் கத்தோலிக்கத் திருஅவையையே சார்ந்துள்ளனர் என்றும், துன்பம் நிறைந்த இந்த கொள்ளைநோய் காலத்தில், அவர்கள், தங்களின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழிகளைத் தேடி வருகின்றனர் என்றும், கர்தினால் ஹூம்ஸ் அவர்கள் தெரிவித்தார்.   

அமேசான் பருவமழைக் காடுகள் பகுதியைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, பிரிந்த கிறிஸ்தவ சபையினர், மற்ற சமயத்தவர், அரசுகள், மனித உரிமை அமைப்புகள், அறிவியலாளர் குழுமம், கலைஞர்கள் மற்றும், நன்மனம்கொண்ட அனைவருக்கும் விண்ணப்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார், கர்தினால் ஹூம்ஸ்.

பொலிவியா அரசு, அமேசான் பகுதியில், கோவிட்-19 கொள்ளைநோய் குறித்து காட்டும் அக்கறையின்மை, கொலம்பியா நாட்டுப் பகுதி அமேசானில் நிலவும் கடும் வறுமையால் மக்கள் சந்திக்கும் பெரும் ஆபத்து, வெனெசுவேலா பகுதியில் சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கனிமவளச் சுரங்கப்பணிகள் போன்றவற்றை அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பழங்குடி மக்கள் மத்தியில் இடம்பறும் இனஅழிப்பு ஆபத்து குறித்து பிரேசில் நாட்டு வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கை, கொரோனா தொற்றுக்கிருமி பரவல் மட்டுமல்ல, சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் சுரங்கப்பணிகள் மற்றும் காடுகள் அழிக்கப்படுவது, அமேசான் பகுதிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளன என்று கூறியுள்ளது.

19 May 2020, 15:20