தேடுதல்

Vatican News
பங்களாதேஷில் கைதிகளுக்கு முகக்கவசம் பங்களாதேஷில் கைதிகளுக்கு முகக்கவசம்  

பங்களாதேஷில் கைதிகள் விடுதலை, திருஅவை பாராட்டு

சிறைகளில் கொள்ளவுக்குமேல் கைதிகள் இருப்பதைத் தவிர்க்கவும், கொரோனா கிருமி தொற்றியுள்ள கைதிகளை வெளியேற்றவுமென, ஓராண்டிற்கும் குறைவாக சிறையில் இருக்கும் மூவாயிரம் கைதிகளை விடுதலைசெய்யவிருப்பதாக, பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில், சிறு குற்றங்களுக்காக பலர் சிறையில் உள்ளவேளை,  அந்நாட்டு அரசு, ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்திருப்பது, தக்க நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான நடவடிக்கை என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.

சிறைகளில் கொள்ளவுக்குமேல் கைதிகள் இருப்பதைத் தவிர்க்கவும், கொரோனா கிருமி தொற்றியுள்ள கைதிகளை வெளியேற்றவுமென, ஓராண்டிற்கும் குறைவாக சிறையில் இருக்கும் மூவாயிரம் கைதிகளை விடுதலைசெய்யவிருப்பதாக, பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து பீதேஸ் செய்தியிடம் அறிவித்த, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Bejoy D'Cruze அவர்கள், கடந்த சில மாதங்களாக, சிறைகளைப் பார்வையிட்ட தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

கைதிகள் மீது அக்கறை காட்டுவது நம் மறைப்பணியின் ஒரு பகுதி என்று கூறிய ஆயர் D'Cruze அவர்கள், பங்களாதேஷ் நாட்டுச் சிறைகளில் நாற்பதாயிரம் கைதிகளே இருக்கக்கூடியவேளை, ஏறத்தாழ 90 ஆயிரம் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

தற்போதைய கொள்ளைநோய் காலக்கட்டத்தில், சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்றுரைத்த ஆயர் D'Cruze அவர்கள், சிறைகளிலுள்ள ஏறத்தாழ 180 கிறிஸ்தவ கைதிகளில் நாற்பது பேர் வெளிநாட்டவர் என்பதையும் எடுத்துரைத்தார். 

இதற்கிடையே, சிறைகளில் மேய்ப்புப்பணியாற்றும் அருள்பணி Liton Hubert Gomes அவர்கள் கூறுகையில், பங்களாதேஷ் நாட்டில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறு சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பலர் குற்றமற்றவர்கள் மற்றும், பலர் மனச்சான்றின் கைதிகள் என்றும் தெரிவித்தார். (Fides)

29 May 2020, 14:14