தேடுதல்

Minneapolisவில் போராட்டம் Minneapolisவில் போராட்டம் 

இனவெறி, கடந்தகால நிகழ்வு மட்டும் அல்ல, அமெரிக்க ஆயர்கள்

இனவெறி, கடந்தகால விவகாரமோ அல்லது, வசதிக்கேற்ப புறக்கணிக்கப்படும் அரசியல் விவகாரமோ அல்ல, மாறாக, உண்மையான மற்றும், இக்காலக்கட்டத்தில் நிலவுகின்ற ஆபத்து - அமெரிக்க ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minneapolis நகரில் இவ்வாரத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சார்ந்த மனிதர் ஒருவர் கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், இனவெறியை ஒழிப்பதற்கு இடம்பெறும் போராட்டம், மனித வாழ்வை ஆதரிப்பதுடன் தொடர்புடைய விவகாரம் என்று கூறியுள்ளனர்.

மே 29, இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஆயர்கள், இனவெறி, வாழ்வு சார்ந்த விவகாரம் என்பதை, ஆயர்களாகிய நாங்கள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி அறிக்கையிடுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இனவெறி, கடந்தகால  விவகாரமோ  அல்லது, வசதிக்கேற்ப புறக்கணிக்கப்படும் அரசியல் விவகாரமோ அல்ல, மாறாக, உண்மையான மற்றும், இக்காலக்கட்டத்தில் நிலவுகின்ற ஆபத்து என்று எச்சரித்துள்ள ஆயர்கள், இதை வேரோடு பிடுங்கி எறிவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திருஅவையின் உறுப்பினர்கள் என்ற முறையில், மிக அடிப்படையான உரிமைகள் மற்றும், நீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னின்று ஆதரவளிப்போம் என்றும், எளிதாக இடம்பெறும் கொடூரமான செயல்களுக்குமுன், கண்களை மூடிக்கொண்டு, எங்களால் இருக்க இயலாது என்றும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மனித வாழ்வும் மதிக்கப்பட வேண்டும் என்பதை, நாங்கள் தொடர்ந்து உரத்த குரலில் அறிக்கையிடுவோம் என்றும், அமெரிக்க ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

மே 25, இத்திங்களன்று, Minneapolis நகரில், 46 வயது நிரம்பிய ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் (George Floyd) என்பவரை, காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் ஒரு மோசடி வழக்கில் கைது செய்தனர். கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்தும் காணொளி இணையத்தில் வெளியானது. அந்த நபரும் இறந்துவிட்டார்.

மேலும், மே 29, இவ்வெள்ளியன்று, பல்லாயிரக்கணக்கான மக்கள், நீதிகேட்டு வெள்ளை மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். மேலும், Minnesota, New York, Atlanta மற்றும் சில நகரங்களிலும், மக்கள் நீதிகேட்டு வன்முறை போராட்டங்களை மேற்கொண்டனர். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 14:58