தேடுதல்

பாத்திமா அன்னை மரியாவின் திரு உருவம் பாத்திமா அன்னை மரியாவின் திரு உருவம் 

நகர வீதிகளில் பாத்திமா அன்னை மரியாவின் ஊர்வலம்

போர்த்துக்கல் நாட்டின் Porto நகரில், மே 31, வருகிற ஞாயிறு, பாத்திமா அன்னை மரியாவின் திரு உருவம், அந்நகரின் சாலைகள் வழியே ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல் நாட்டின் Porto நகரில், மே 31, வருகிற ஞாயிறு, அன்னை மரியாவின் வணக்க மாதம் நிறைவுறும் வேளையில், மாலை 8.30 மணிக்கு, பாத்திமா அன்னை மரியாவின் திரு உருவம், அந்நகரின் சாலைகள் வழியே ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னையின் பரிந்துரைக்கு அளவற்ற சக்தி உள்ளது என்பதை நம்பும் மக்களுக்கு, பாத்திமா அன்னை மரியாவை தங்கள் வீதிகளில் காண்பது மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று, இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் அருள்பணி Rubens Marques அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த பல நாள்களாக ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ள இயலாத மக்கள், தங்கள் இல்லம் தேடி அன்னை மரியா வருவதை பெரிதும் வரவேற்பார்கள் என்றும், தற்போதைய நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, நகர மக்கள் அனைவரையும், அன்னை மரியா ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் அருள்பணி Marques அவர்கள் கூறினார்.

அன்னை மரியா நகரைச் சுற்றி பவனி வரும் வேளையில், செபமாலையின் அனைத்து மறையுண்மைகளும் தியானிக்கப்பட்டு, செபிக்கப்படும் என்றும் அருள்பணி Marques அவர்கள் தெரிவித்தார்.

28 May 2020, 14:31