தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் Baseco கடற்கரை பிலிப்பீன்ஸ் Baseco கடற்கரை 

பிலிப்பீன்ஸ் திருஅவை: சுற்றுச்சூழல் கொலையாளிகள் புறக்கணிப்பு

மனித வாழ்வு, மனித மாண்பு, கடவுளின் படைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும், திருஅவை புறக்கணிக்கின்றது - பிலிப்பீன்ஸ் ஆயர்கள், துறவு சபைகள்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தும் நிலக்கரி போன்ற தொழிற்சாலைகளுக்கு, திருஅவையின் சொத்துக்கள் மூலதனம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று, பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆயர்களும், துறவு சபைகளும், மே 21, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் முதலீடு செய்வது புறக்கணிக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் (Laudato Si’) என்ற திருமடலில் வலியுறுத்தியிருப்பதைச் செயல்படுத்தும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் ஆயர்களும், துறவு சபைகளின் தலைவர்களும், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புதைவடிவ எரிபொருள்களில், நிலக்கரி மிகவும் மோசமானது எனவும், இது, காலநிலை மாற்றத்திற்கு மிக அதிகமாகப் பங்களிப்பது எனவும் கூறியுள்ள பிலிப்பீன்ஸ் திருஅவை அதிகாரிகள், மனித வாழ்வு, மனித மாண்பு, கடவுளின் படைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும், திருஅவை புறக்கணிக்கின்றது என்று கூறியுள்ளனர்.

கோவிட்-19 கொள்ளைநோய் மற்றும், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலைகள், சிறந்ததோர் உலகை சமைப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், அத்தலைவர்கள் குறிப்பிட்டுளனர்.

2015ம் ஆண்டு மே 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் Laudato Si’ என்ற திருமடலை வெளியிட்டார். (UCAN)

23 May 2020, 13:50