தேடுதல்

பாகிஸ்தானில் கோவிலில் தொற்றுக்கிருமி நாசினி அடிக்கும் பணி பாகிஸ்தானில் கோவிலில் தொற்றுக்கிருமி நாசினி அடிக்கும் பணி 

பாகிஸ்தானில், ஆன்ம நலனைக் காக்க வலம் வரும் திருநற்கருணை

மக்கள் வாழும் பகுதிகளுக்கு, திருநற்கருணை ஆண்டவரை பவனியாக எடுத்துச்செல்வதும், நற்கருணை பெற விழைவோருக்கு வீடு, வீடாகச் சென்று வழங்குவதும் லாகூர் உயர் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகின் அனைத்து நாடுகளிலும், கோவிட் 19 தொற்றுக்கிருமி பரவியுள்ள இவ்வேளையில், மக்களின் உடல் நலனைக் காப்பது ஒரு முக்கிய கடமையாக இருப்பதுபோலவே, அவர்களது நம்பிக்கையை வளர்ப்பதும் முக்கிய கடமையாக உள்ளது என்று, பாகிஸ்தானின் லாஹூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.
மக்களின் நலனைக் காப்பதற்கு, பொது வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ள வேளையில், மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு, தொலைக்காட்சி வழியே வழிபாடுகள் நடைபெறும் அதே நேரம், மக்கள் வாழும் பகுதிகளுக்கு, திருநற்கருணை ஆண்டவரை பவனியாக எடுத்துச்செல்வதும், நற்கருணை பெற விழைவோருக்கு வீடு, வீடாகச் சென்று வழங்குவதும், லாகூர் உயர் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்று, பேராயர் ஷா அவர்கள் கூறினார்.
இதே வழிமுறைகள் கராச்சி உயர் மறைமாவட்டத்திலும் பின்பற்றப்படுவதாக, அம்மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளனர்.
திருநற்கருணை ஆராதனை ஒவ்வொருநாளும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய இராவல்பிண்டி-இஸ்லாமாபாத் பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் நற்கருணை ஆராதனைகள், கடவுளின் குணமளிக்கும் வரத்தை, இவ்வுலகிற்குக் கொணரும் வழிகள் என்று எடுத்துரைத்தார். (Fides)
 

07 May 2020, 13:51