தேடுதல்

Vatican News
லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம்  (AFP or licensors)

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், மே 16 முதல்...

மே 16லிருந்து லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், ஒவ்வொரு நாளும், பிற்பகல் 2 மணி முதல், மாலை 6 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்படும். அன்னை மரியா தோன்றிய அந்த புகழ்மிக்க குகைக்கு சற்று தூரத்தில் இருந்தவண்ணம் அன்னையிடம் செபிக்க அனுமதி உண்டு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள அன்னை மரியாவின் திருத்தலம், மே 16, இச்சனிக்கிழமை முதல், திருப்பயணிகளுக்குத் திறந்து வைக்கப்படும் என்பதை, இத்திருத்தலத்தின் தலைமைப் பொறுப்பாளர், அருள்பணி Olivier Ribadeau Dumas அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இத்திருத்தலம் இச்சனிக்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், தற்போது, திருத்தலத்தைச் சுற்றியுள்ள 100 கி.மீ. சுற்றளவில் வாழும் திருப்பயணிகள் மட்டும் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலம், ஒவ்வொரு நாளும், பிற்பகல் 2 மணி முதல், மாலை 6 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்படும் என்றும், அன்னை மரியா தோன்றிய அந்த புகழ்மிக்க குகைக்கு மிக அருகில் சென்று தொடுவதற்கு அனுமதி இல்லை, மாறாக, சற்று தூரத்தில் இருந்தவண்ணம் அன்னையிடம் செபிக்க அனுமதி உண்டு என்றும், அந்த திருத்தலப் பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.

குழுக்களாக மக்கள் கலந்துகொள்ளும் திருப்பலிகள், ஏனைய பக்தி முயற்சிகள், அன்னையின் அற்புத சக்திமிக்க நீரில் குளிக்கும் வசதிகள் ஆகியவை இன்னும் துவங்கவில்லை என்பதையும், புனித நீரை எடுத்துச்செல்லும் வசதிகள் புதிய வழிகளில் செய்யப்பட்டுள்ளன என்பதையும், திருத்தலம் கூறியுள்ளது.

திருப்பயணிகளின் வருகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் இத்திருத்தலம் அண்மைய மூடுதலால் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இந்த நெருக்கடியை நீக்க பக்தர்களின் உதவிகள் தேவை என்றும், திருத்தலத்தின் பொறுப்பாளர், அருள்பணி Dumas அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

14 May 2020, 15:20