தேடுதல்

Vatican News

மே 14ம் தேதி அழைப்பிற்கு மக்களின் பதிலிறுப்பு

"செபம் என்பது, உலகெங்கும் உயர்வாகக் கருதப்படும் ஒரு மனித முயற்சி. கொரோனா தொற்றுக்கிருமியை வெற்றிக்கொள்ள மே 14ம் தேதியன்று, செபம், உண்ணா நோன்பு, பிறரன்புச் செயல் ஆகியவற்றில் ஈடுபடுவோம்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலை முடிவுக்குக் கொணர, உலகெங்கும் வாழும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இணைந்து, மே 14, இவ்வியாழனன்று, செபம், உண்ணாநோன்பு, மற்றும் பிறரன்புச் செயல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

மனித உடன்பிறந்த நிலை என்ற உலகளாவிய ஓர் அமைப்பின் உயர்மட்டக் குழு பரிந்துரைத்த இத்திட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முழுமையாக ஏற்று, மே 3ம் தேதி ஞாயிறன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், இந்நாளை கடைபிடிக்குமாறு, உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

"செபம் என்பது, உலகெங்கும் உயர்வாகக் கருதப்படும் ஒரு மனித முயற்சி. மனித உடன்பிறந்த நிலை உயர் மட்டக் குழு பரிந்துரைத்துள்ள இத்திட்டத்தை முழுமையாக ஆதரித்து, நான் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். கொரோனா தொற்றுக்கிருமியின் பரவலைத் தடுத்து வெற்றிக்கொள்ள மே 14ம் தேதியன்று, செபம், உண்ணா நோன்பு, பிறரன்புச் செயல் ஆகியவற்றில் ஈடுபடுவோம்" என்ற விண்ணப்பத்தை திருத்தந்தை விடுத்தார்.

மே 14 இவ்வியாழனன்று மேற்கொள்ளப்படும் இவ்வுலகளாவிய முயற்சியை மையப்படுத்தி, வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், திருத்தந்தையின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, பலர், அவரவர் மொழிகளில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இக்கருத்துக்களில் ஒரு சில இதோ: "கொரோனா தொற்றுக்கிருமியைக் கண்டு, நாம் மனம் தளரக்கூடாது"; "ஒரு குடும்பமாக, திருஅவையாக, உலகம் என்ற குடும்பமாக இந்த தொற்றுக்கிருமியின் பரவலை வெற்றி கொள்வோம்"; "இந்தத் தொற்றுக்கிருமிக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம், செபம்"; "இந்த நெருக்கடி காலம் நம்மை ஒண்றிணைத்துள்ளது என்பதை, இனி, எப்போதும் நினைவில் கொள்வோம்".

13 May 2020, 13:20