தேடுதல்

Vatican News
சொந்த இடங்களுக்கு திரும்ப காத்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப காத்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்  (AFP or licensors)

புலம்பெயர்ந்த தொழிலாளரின் பயணத் தடைகள் நீக்கம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 90 இலட்சம் மக்கள், ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்கின்றனர் என்று, 2016-17ம் ஆண்டின் இந்திய பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்—19 கட்டுப்பாட்டு விதிமுறைகளால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், இன்னல்களை எதிர்கொள்ளும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், புனிதத் தலங்களுக்குச் சென்ற மக்கள், மாணவர்கள் மற்றும், சுற்றுலாப் பயணிகள், தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதை, வரவேற்றுள்ளனர், தலத்திருஅவை அதிகாரிகள்.

ஏப்ரல் 29, இப்புதனன்று, இந்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும், யூனியன் பகுதிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கை பற்றி யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் (CCBI) புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி Jaison Vadassery அவர்கள், அரசின் இவ்வறிக்கை, உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியது என்று கூறினார்.

அரசின் இந்த அறிவிப்பு, உடல் அளவிலும், மனத்தளவிலும் துன்புறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் நலவாழ்வு பற்றிக் கவலைப்படும் குடும்பங்களுக்கும், மனச்சுமையை அதிகம் குறைக்கும் என்று, அருள்பணி Vadassery அவர்கள் கூறினார்.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு சற்று தாமதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்திலும், கவலையிலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்துவரும் தொழிலாளர்களுக்கு இது ஆறுதலாகவே உள்ளது என்றும், அருள்பணி Vadassery அவர்கள் கூறினார்.

ஆயினும், இந்த மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு இடம்பெயர்கையில், அவர்கள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படுவதற்கு அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றும், இந்த மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பேருந்துகளில் இவர்கள் செல்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, இராஜஸ்தான், மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களில், கட்டுமானம், தொழிற்சாலைகள், வீட்டுவேலை, துணிக் கடைகள், செங்கல் சூளைகள், போக்குவரத்து மற்றும், வேளாண்மைத் தொழில்களைச் செய்து வருகின்றனர் என்றும், அருள்பணி    Vadassery அவர்கள் கூறினார்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 90 இலட்சம் மக்கள், ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்கின்றனர் என்று, 2016-17ம் ஆண்டின் இந்திய பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தியாவின் 2011ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மாநிலங்களுக்குள்ளேயே புலம்பெயரும் தொழிலாளரின் எண்ணிக்கை இதைவிட ஏறத்தாழ இருமடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது. (UCAN) 

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்கள், புனித தலங்களுக்குச் சென்ற மக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர், அவரவர் மாநிலங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கண்காணிப்பதற்காக ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவும், வீடு திரும்பியதும் அவர்கள் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், மே 01, இவ்வெள்ளி காலை 5 மணிக்கு, ஊரடங்கிற்குப்பின் முதல் முறையாக தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹதியா பகுதிக்கு, 1,200 தொழிலாளர்களுடன் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு இரயிலை இயக்கியுள்ளது இரயில்வே அமைச்சகம். மேலும் சில இரயில்களை இன்று இயக்கவும், அந்த அமைச்சகத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

முறைசாரா பொருளாதாரத்தில் உள்ள 160 கோடி தொழிலாளர்கள், வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு என்று, உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

01 May 2020, 12:55