தேடுதல்

உதவிகள் செய்யும் புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணி அருள் சகோதரிகள் உதவிகள் செய்யும் புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணி அருள் சகோதரிகள் 

வறியோருக்கு உதவும் அன்னை தெரேசா அருள் சகோதரிகள்

ஹௌரா பகுதி சேரிகளில் உள்ள மக்களுக்கு அன்னை தெரேசாவின் அருள் சகோதரிகள் ஆற்றிவரும் பணிகளுக்கு, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், தன் நன்றியையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொல்கத்தா நகரில் அமைந்துள்ள பல்வேறு சேரிப்பகுதிகளில் வாழும் 40,000த்திற்கும் அதிகமான வறியோருக்கு புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணி அருள் சகோதரிகள் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ள ஹௌரா பகுதியின் சேரிகளில் உள்ள மக்களுக்கு அன்னை தெரேசாவின் அருள் சகோதரிகள் ஆற்றிவரும் பணிகளுக்கு, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், தன் நன்றியையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.

மிகக்குறுகிய கால அளவில், மார்ச் 24ம் தேதி திடீரென அறிவிக்கப்பட்ட இந்த முழு அடைப்பு காலம், வறியோர் வாழ்வில், மிக அதிகமான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது என்றும், புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் நிலை, அதிக கவலையை அளிக்கின்றது என்றும், ஆசிய செய்தி கூறியுள்ளது.

இந்நிலையில், புனித அன்னை தெரேசா துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகள், முன்னணியில் இருந்து வறியோருக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்றும், மேற்கு வங்காளத்தில் மே 31ம் தேதி வரை முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அருள் சகோதரிகள், வறியோருக்கு வழங்கும் உதவிகளை, இன்னும் பல இடங்களில் தொடங்கியுள்ளனர் என்றும், கொல்கத்தா முதன்மை அருள்பணியாளர் டோமினிக் கோமஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

வறியோர் குடும்பங்களுக்கு, அரிசி, கோதுமை மாவு, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை அடங்கிய பைகளை அன்னை தெரேசா அருள் சகோதரிகள் ஒவ்வொரு நாளும் வழங்கி வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, ஏறத்தாழ 200 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுடன், மேற்கு வங்கத்தை நெருங்கிவரும் அம்ஃபான் (Amphan) புயலால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என்று ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2020, 14:48