தேடுதல்

Vatican News
அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அருள்பணி அதோல்போ நிக்கோலஸ்   (Vatican Media)

மே 23, அருள்பணி நிக்கோலஸ் அவர்களுக்கு சிறப்புத் திருப்பலி

இயேசு சபையின் தாய் ஆலயம் என்றழைக்கப்படும் Gesù ஆலயத்தில், மே 23, காலை 10.30 மணிக்கு, மறைந்த இயேசு சபைத்தலைவர் அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்களுக்கென அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் சிறப்புத் திருப்பலி ஆற்றுவார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு  சபையின் முன்னாள் உலகத் தலைவர் அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்கள், மே 20ம் தேதி, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இறையடி சேர்ந்தார் என்பதை உரோம் நகரில் உள்ள இயேசு சபை தலைமையகம் இப்புதனன்று அறிவித்தது.

அருளும் ஞானமும் மிகுந்த ஒரு மனிதராக, எளிமையும், அர்ப்பண உணர்வும் கொண்டு, வாழ்ந்தவர் அருள்பணி நிக்கோலஸ் என்று கூறியுள்ள இச்செய்தியில், ஜப்பான், ஆசியா பசிபிக் பகுதிகளில் உள்ள இயேசு சபையினரும், ஸ்பெயின் நாட்டில் உள்ள இயேசு சபையினர் மற்றும் அருள்பணி நிக்கோலஸ் அவர்களின் உறவினர் அனைவரும் இவரது மறைவால் அதிக துயரத்தில் இருப்பதாக இச்செய்தி கூறுகிறது.

இயேசு சபையின் தலைமையக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள இச்செய்தியில், இச்சபையின் தற்போதைய உலகத் தலைவர், அர்த்தூரோ சோசா அவர்கள், அருள்பணி நிக்கோலஸ் அவர்களின் வாழ்வும், பணியும், அமைதியான மனப்பக்குவம், ஜப்பான் கலாச்சாரத்திற்கு தன்னையே உட்படுத்திக்கொண்ட போக்கு ஆகிய உயர்ந்த பண்புகளால் நிறைந்திருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடனும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனும் நெருங்கிய உறவு கொண்டிருந்த அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், திருத்தந்தையருக்கு சிறப்புப்பணி ஆற்றுவதில், இயேசு சபை தனி ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார் என்பதை, அருள்பணி சோசா அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் காரணமாக விமானப் பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அருள்பணி நிக்கோலஸ் அவர்களின் இறுதிப் பயணத்தில் தன்னால் கலந்துகொள்ள இயலாதது குறித்து அருள்பணி சோசா அவர்கள் தன் ஆழ்ந்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.

இயேசு சபையின் தாய் ஆலயம் என்றழைக்கப்படும் ஜெசு ஆலயத்தில், (Church of Gesù) மே 23, வருகிற சனிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, மறைந்த இயேசு சபைத்தலைவர் அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்களுக்கென நிறைவேற்றப்படும் திருப்பலியை, அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்று இயேசு சபை தலைமையகம் அறிவித்துள்ளது.

21 May 2020, 13:32