தேடுதல்

Vatican News
54வது உலக சமூகத் தொடர்பு நாள் 54வது உலக சமூகத் தொடர்பு நாள்  

நேர்காணல்: 54வது உலக சமூகத் தொடர்பு நாள்

நம் சொந்தக் கதை, ஒவ்வொரு மாபெரும் கதையின் ஓர் அங்கமாக மாறுகிறது. நம் கதைகளின் பதிவுகள் ஒரேமாதிரி இருந்தாலும்கூட, அவற்றைக் கடவுளிடம் சொல்வது ஒருபோதும் பயனின்றி போகாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா:வத்திக்கான்

மே 24, வருகிற ஞாயிறு 54வது உலக சமூகத் தொடர்பு நாள். “நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வாயாக (வி.ப.10,2) – வாழ்வு வரலாறாக மாறுகிறது” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக நாளுக்கென, கடந்த சனவரி 24ம் தேதி, சலேசு நகர் புனித பிரான்சிஸ் விழாவன்று, செய்தி ஒன்றை வெளியிட்டார். திருத்தந்தையின் அச்செய்தி வலியுறுத்தும் முக்கிய கருத்து, நமக்கு விடுக்கும் அழைப்பு போன்றவை பற்றி பகிர்ந்துகொள்கிறார், மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்பணி அமல்ராஜ். இவர், அச்சபையின் உரோம் தலைமையகத்தில் ஆவணக் காப்பாளர் ஆவார்.

54வது உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 54-வது உலக சமூகத் தொடர்பு  நாள் செய்தியின் முக்கிய கருத்து என்ன?

அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

2020ம் ஆண்டின் திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தியானது “கதை சொல்லுதலை” மையக் கருவாகக் கொண்டுள்ளது. திருத்தந்தையின் இந்தச் சிந்தனை மிகவும் எதார்த்தமானதொன்றாகவும், மனிதர் அனைவருக்கும் பொதுவான மற்றும், இன்றியமையாத ஒன்றைப் பற்றியதாகவும் இருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு மனிதரும், இடமும், சமூகமும், மற்றும் நிறுவனமும் தனக்கே உரித்தானதொரு கதையை அதாவது வரலாற்றைக் கொண்டுள்ளனர். இத்தகைய கதைகள், வரலாறுகள் மற்றும் வாய்வழிச் செய்திகளை ஆவணப்படுத்தி நம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளும் அறிந்துகொள்ளும் வகையில் அவைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஆவணப்படுத்தாமல் நம்முடைய பழைய வரலாறுகளை இழப்பதென்பது நம்முடைய எதிர்காலத்தை இழப்பதற்குச் சமம் என்று, Wang Shu அவர்கள் கூறுகிறார். நம்முடைய நிகழ்கால வாழ்வு, கடந்தகால அனுபவங்களாலும் எதிர்காலக் கனவுகளாலும் கட்டமைக்கப்படுவதாகும். எனவே, நாம் கூறுகின்ற செய்திகள் மற்றும் கதைகள் உண்மையுடையதாக, ஆக்கப்பூர்வமானதாக மற்றும், வாழ்வளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே, திருத்தந்தையின் 54-வது உலக தொலைத் தொடர்பு நாள் செய்தியின் சுருக்கமாகும்.

அப்படியெனில் கதை சொல்லுதலில் சமூகத் தொடர்பு கருவிகளின் பயன்பாடு பற்றி திருத்தந்தை அவர்கள் என்ன கூறுகிறார்கள்?

அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுதல் அல்லது செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பதும் ஒரு கலையாகும். இந்தக் கலை எல்லா மனிதரிடமும் உள்ளது. இது மனிதருடைய இயல்பு குனமாகும். இதைத்தான் திருத்தந்தை அவர்கள், “மனிதர்கள் இயல்பிலே கதைசொல்லிகள்” என்று தம் செய்தியில் கூறுகின்றார். இந்தக் கதையை பிறருக்கு எடுத்துச் செல்வதில், அச்செய்தியைப் பரப்புவதில் தொலைத்தொடர்பு சாதனங்கள் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றன.

நம் அனைவருடைய வாழ்விலும், கதையானது ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது, மற்றும் எதிர்காலத்திலும் அதைத் தக்க வைத்துக்கொள்ளும். ஒரு தகவலை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள பல வடிவங்கள் உள்ளன. இதையே நம் தமிழ் இலக்கியத்தில் இயற்கலை, இசைக்கலை மற்றும் நாடகக் கலை என்று பிரிப்பார்கள். நாம் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை இன்னொருவர் உடனடியாகப் புரிந்துகொண்டு அதை எற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அக்கருத்தை எளிமையான மற்றும், மற்றவரை எளிதில் ஈர்க்கக்கூடி,ய இம்மூன்று இலக்கிய வடிவங்களில் ஏதாவது ஒன்றதைத்தான் தேர்வு செய்ய முடியும். இவ்வாறுதான் உலகிலுள்ள எல்லாக் கலாச்சாரங்களிலுமே காப்பியங்கள், நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், உரை நடைகள், தெருக்கூத்துகள், நடவுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என, பல்வேறு இலக்கிய வடிவங்கள் உருவாகின.

எடுத்துக்காட்டாக, நமது விவிலியம் ஒரு வரலாற்றுக் கதை நூலாகும். அதாவது, திருவிவிலியமானது, நமக்கு நம்முடைய மீட்பின் வரலாற்றை ஒரு கதை வடிவில் தருகின்றது. ஏன், திருத்தந்தை தனது செய்தியில் கூறுகின்றவாறு, இயேசு கிறிஸ்துவே ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி என்பதை அவருடைய போதனையில் பயன்படுத்தும் கதைகள், மற்றும் உவமைகளைக் கொண்டு அறியலாம்.

இவ்வாறே, கிரேக்க இலக்கியத்தில் இலியட், ஒடிசி, உரோமானிய இலக்கியத்தில்  Virgil லின் Aeneid, Caesarன் In Catilinam (Gallic War)¸ Ovidன் Metamorphoses¸ நமது தமிழ் இலக்கியத்தின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சமஸ்கிருத இலக்கியத்தின் இராமாயணம் மற்றும், மகா பாரதம் போன்ற இலக்கிய வடிவங்கள். இவை அனைத்துமே பண்டைய இலக்கியங்கள்.

இவைகளைக் கடந்து நமது தமிழ் கலாச்சாரத்தில் தாத்தா பாட்டி கதைகள் மிகவும் ஆழமான வாழ்வியல் சிந்தனைகளையும், ஒழுக்க நெறிகளைக் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே கற்றுத் தருவனவாகவும் இருக்கின்றன. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை, படிப்பறிவில்லாத பாமர மக்களும் அறிந்து கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட கலை வடிவம்தான் இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் நடத்தப்படும் “பாஸ்கா நாடகம்”. ஆக, நாம் கொண்டாடும் பாஸ்கா விழாவே கதையாடலின் ஒரு வகைதான்.

ஆனால் கதைகள் வழியாக மக்களைச் சென்றடைய உதவும் நூல்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படங்கள் மற்றும், இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமுதாய ஊடகங்களான Internet, whatsapp, facebook, twitter, instagram youtube போன்ற சமூகத் தொடர்பு கருவிகள் சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனவே, இது பற்றி திருத்தந்தை தனது செய்தியில் என்ன சொல்லியிருக்கின்றார்? 

அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

பல வேளைகளில் பலரும் பல செய்திகளைச் சொன்னாலும், அவை அனைத்துமே நல்லவைகளாக பலன்தரக்கூடியனவாக இருந்துவிடுவதில்லை. சில நேரங்களில் தவறான செய்திகள் என்று அழைக்கப்படும் fake news சமுதாய வலைத்தளங்களை ஆக்ரமித்துக் கொள்கின்றன. இவை மட்டுமல்லாமல், நம்மில் சிலர் ஒரு நபரையோ, குழுவையோ, இனத்தையோ, மற்றும் நாட்டையோ பிடிக்காதபட்சத்தில் அவர்களைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான மற்றும், character assasination என்று கூறப்படும் ஒருவரின் நல்ல பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் மொட்டைக் கடிதாசி எனப்படும் anonimous எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நம்மில் சிலர், “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு” என்று திருவள்ளுவர் சொல்வதைப் போன்று, வார்த்தைகளினால் ஒருவரை இழிந்து பேசுவார்கள். இச்செயல்கள் எல்லாம் மனித நிலைக்குப் பொருந்தாத கீழ்த்தரமானதொரு செயலாகும் மற்றும், ஒரு வகையான மன நோயாகும். மற்றும் சிலர், அன்பாக அழகாக இனிய வார்த்தைகளால் நம்மோடு பேசுவார்கள், ஆனால் அதற்குப் பின்னால் மிகப்பெரியதொரு சதி இருக்கும். இத்தகையோரை, திருத்தந்தை அவர்கள் தொடக்கநூலில், ஆதாம் மற்றும் ஏவாளோடு பேசிக் கவர்ந்து அவர்களை அழிவுக்கு இட்டுச்சென்ற அந்தப் பாம்பின் அதாவது சாத்தானின் குணத்தோடு ஒப்பிடுகின்றார். எனவே, இத்தகைய தவறான, உண்மைக்குப் புறம்பான, மற்றும் மனித மாண்புக்கு எதிரான கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடுவதைத் தவிர்க்க வேண்டுமென திருத்தந்தை அவர்கள் கூறுகிறார்.

இந்தச் செய்தி வழியாக திருத்தந்தை நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?

அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

நான் ஏற்கனவே கூறியவாறு, மனிதர் ஒரு கதை சொல்லி, இவ்வகையில்,  நாம் அனைவரும் கதை சொல்லிகள். நம் ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு கதைதான். இலத்தீன் மொழியிலே Historia magister vitae est அதாவது “வரலாறு என்பது நமக்குப் பாடம் கற்றுத்தரும் ஓர் ஆசிரியரைப் போன்றது” என்பர். நம் முன்னோர்களுடைய வாழ்வை நாம் படிக்கின்றபொழுது அவர்களுடைய வாழ்வு முறை, நற்குணங்கள், மனித நேயம் மற்றும் சமுதாய நலன் போன்றவை நமக்குப் பாடமாகின்றன. எடுத்துக்காட்டாக புனித அகுஸ்தினார், புனித பிரான்சிஸ் சவேரியார், அன்னை தெரேசா, காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், பெரியார், கக்கன், காமராசர் போன்றவர்களுடைய வரலாறுகள். அதேவேளை, சிலருடைய வரலாறுகள், நாம் எவ்வாறு இருக்கக் கூடாது எனச் சொல்லுகின்றன். எடுத்துக்காட்டாக சர்வாதிகாரியான ஹிட்லர், காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே மற்றும், பாசிசச் சிந்தனை கொண்ட முசோலினி.

இவ்வாறு, வரலாற்றில் சிலருடை வாழ்க்கைக் கதைகள் ஆக்கப்பூர்வமானதாக நேர்மறைச் சிந்தனைகளோடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியதாகவும் மற்றும், சிலருடையவை எதிர்மறையானதாக அழிவைக் கொடுக்கக்கூடியதாக இருக்கின்றன என்தைச் சுட்டிக் காட்டி, திருத்தந்தை அவர்கள் நம் ஒவ்வொருவரையும் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஓர் அத்தியாயமகக் கருதி நம்முடைய வாழ்க்கையையும், ஒரு வரலாறாக எழுதிட நம்மை அழைக்கின்றார். ஏனெனில், நம் ஒவ்வொருவருடைய கதையும் அல்லது வரலாறும் நம் சமுதாயத்தினுடைய, திருச்சபையினுடைய மற்றும் உலக வரலாற்றினுடைய ஒரு பகுதியாகும், மற்றும் திரு விவிலியத்திற்கான பிற்சேர்க்கையாகும் என்று திருத்தந்தை கூறுகின்றார்.

வரலாறு என்பது பல இனிமையான மற்றும் கசப்பான நினைவுகளின் தொகுப்பாகும். இதுவே, வரலாற்று ஆசிரியர்களால் கதையாகச் சொல்லப்பட்டு ஒரு வரலாற்று ஆவணமாகின்றது. வரலாற்றை ஆய்வு செய்கின்றவர்கள் வாழ்வின் இன்ப - துன்ப இரு பக்கங்களையும் அல்லது நேர்மறை - எதிர்மறை மற்றும் ஆக்கப்பூர்வமான - அழிவை ஏற்படுத்திய நினைவுகளையும் சமமாக ஆய்வுக்கு உட்படுத்தி அந்த நிகழ்வுகளின் தொகுப்பை ஒரு வரலாறாகத் தருகிறார்கள்.

“மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக் 2,19) என்று திருவிவிலியம் நமக்குகக் கூறுகின்றது. மரியாவுடைய புகழ்பாடலை எடுத்துக்கொண்டால், அது அவருடைய வாழ்வில் இறைவன் அவருக்குச் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் நினைத்து, அவர் பாடிய நன்றிப் பாடலின் வடிவமாகும். எனவே, நாமும் மரியாவைப் போன்று, நம் வாழ்வில் நடந்த இன்ப-துன்ப நிகழ்வுகளை மனதில் சேமித்து வைத்து, மீட்புப் பயணத்தின் ஒளியில் சிந்தித்து அதையே நம் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் நாம் கடந்துவந்த பாதையின் பாதச் சுவடுகளாக விட்டுச் செல்வோம். அவைகளே எதிர்காலத்தில் அவர்களுக்கு நமது கதையாகவும் வரலாறாகவும் மாறட்டும் என்பதே, அவருடைய இச்செய்தி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்குத் தருகின்ற அழைப்பாகும்.

21 May 2020, 12:05