தேடுதல்

Vatican News
புதுடெல்லியில் சிறார் புதுடெல்லியில் சிறார் 

சிறார் பாதுகாப்பு குறித்த இணையதள கருத்தரங்குகள்

தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலவாழ்வு பிரச்சனை, சிறார் உரிமைகள் சார்ந்த பிரச்சனையாக விரைவில் மாறக்கூடும் - ஐ.நா. பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறாரைப் பாதுகாப்பது குறித்த அறிவுரைகள் மற்றும், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றி பகிர்ந்துகொள்வதற்கென, ISC எனப்படும், உலகளாவிய சிறார்பாதுகாப்பு கருத்தரங்கு அமைப்பு, மே 29, இவ்வெள்ளிக்கிழமையிலிருந்து, இணையதள கருத்தரங்குகளைப்   புதிதாகத் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறாரின் நலவாழ்வு அல்லது அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்ற, அனைத்துவிதமான உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றினின்று அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில், திருஅவை பிரதிநிதிகள், அறிவியல் நிபுணர்கள் மற்றும், பல்வேறு துறைகளைச் சார்ந்தோர், தங்களின் கருத்துக்களை இக்கருத்தரங்களில் பகிர்ந்துகொள்வற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறார், கோவிட்-19 கொள்ளைநோயின் பின்விளைவுகளால் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில், கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய மதங்களைச் சார்ந்த நிறுவனங்களும், அவர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட, இந்த இணையதள கருத்தரங்குகள் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

“பாதுகாப்பான திருஅவை” என்ற தலைப்பில் நடைபெறும், இணையதள கருத்தரங்குகள் தொடரின் முதல் நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சார்ந்தோர், தற்போதைய கொள்ளைநோய் சூழலிலும், மற்ற காலக்கட்டங்களிலும், சிறாரைப் பாதுகாப்பது பற்றிய நல்ல நடைமுறை பழக்கவழக்கங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று ISC அமைப்பு கூறியுள்ளது.

இக்கருத்தரங்குகள் பற்றி, மே 26, இச்செவ்வாயன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த ISC அமைப்பின் செயல்திட்ட குழுவின் உறுப்பினரான, அருள்பணி Hans Zollner அவர்கள், கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை, திருஅவை உள்ளிட்ட எல்லா அமைப்புக்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதை விளக்கினார்.

அண்மை வாரங்களில், சிறார்க்கெதிரான வன்முறையும், வீடுகளில் இடம்பெறும் வன்முறையும் அதிகரித்திருப்பது குறித்த ஊடகங்களின் செய்திகள் பற்றியும் மற்றும், தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலவாழ்வு பிரச்சனை, சிறார் உரிமைகள் சார்ந்த பிரச்சனையாக விரைவில் மாறக்கூடும் என, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் எச்சரித்துள்ளது பற்றியும், அருள்பணி Zollner அவர்கள் சுட்டிக்காட்டினார். 

29 May 2020, 14:26