தேடுதல்

பாலஸ்தீனிய காசா பகுதி பாலஸ்தீனிய காசா பகுதி 

20 இலட்சம் மக்கள் வாழும் காசா நிலப்பரப்பில் கொரோனா ஆபத்து

சுத்தமான குடிநீர், நலவாழ்வு பராமரிப்பு, கல்வி வசதி என்ற பல அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டுள்ள காசாப்பகுதி, கோவிட் 19 தொற்றுநோயால் தாக்கப்படக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள் - எருசலேம் காரித்தாஸ் இயக்குனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பூமியின் ஒரு பகுதியாக விளங்கும் காசா (Gaza) பகுதி, உலகிலேயே, மிக, மிக நெருக்கமாக மக்கள் வாழும் ஒரு குறுகிய நிலப்பரப்பு என்றும், அப்பகுதியில் தற்போது, 55 பேர் கோவிட் 19 தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எருசலேம் காரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் Ameen Sabbagh அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

மிகக் குறுகிய காசா நிலப்பரப்பில், 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்றும், இவர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்ரேல் அரசு விதித்துள்ள தடைகள், இன்றைய நெருக்கடி நிலையில், நலம் சார்ந்த பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் என்றும் Sabbagh அவர்கள் எடுத்துரைத்தார்.

மக்கள் பின்பற்ற வேண்டிய சமுதாய தூரம், முகக்கவசம், கையுறைகள், கிருமி ஒழிப்பு மருந்துகள் என்று பல வழிகளிலும் பின்னடைவைப் பெற்றுள்ள காசாப்பகுதியில், தொற்றுக்கிருமி பரவினால், அது, பெரும் அழிவைக் கொண்டுவரும் என்று, Sabbagh அவர்கள் எச்சரித்துள்ளார்.

சுத்தமான குடிநீர், நலவாழ்வு பராமரிப்பு, கல்வி வசதி என்ற பல அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டுள்ள காசாப்பகுதி, கோவிட் 19 தொற்றுநோயால் தாக்கப்படக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுமாறு, எருசலேம் காரித்தாஸ் இயக்குனர் Sabbagh அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

28 May 2020, 14:15