தேடுதல்

Vatican News
கானாவில் கொரோனா பாதிப்பு கானாவில் கொரோனா பாதிப்பு  (AFP or licensors)

கோவிட்-19 நோய் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கானா ஆயர்கள் நிதியுதவி

கோவிட்-19 நோய் எதிர்ப்பு போராட்டத்தில், நலப்பணியாளர்களுக்கும், முதியோர்களுக்கும், இத்தொற்றுநோய் பரவும் ஆபத்திலிருப்போருக்கும் தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்கிவரும் ஆயர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நோயை எதிர்த்து மேற்கு ஆப்ரிக்க கானா நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உதவும் நோக்கத்தில், நிதியுதவியை வழங்கியுள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

கானா நாட்டு பணமான செதாரில் (cedar) எழுபதாயிரத்தை அந்நாட்டு ஆயர் பேரவை சார்பில் அரசிடம் வழங்கிய அந்நாட்டு ஆயர் பேரவையின் துணைத்தலைவர், பேராயர் Charles Gabriel Palmer-Buckle அவர்கள், இது தவிர, அடுத்த 9 மாதங்களுக்கு, ஒரு திட்டத்தை செயல்படுத்தி, இந்நோய்க்கெதிரான போராட்டத்தில் கத்தோலிக்க நலப்பணியாளர்களுக்கும், முதியோர்களுக்கும், இத்தொற்றுநோய் பரவும் ஆபத்திலிருப்போருக்கும் தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்கிவருவகாகவும் தெரிவித்தார்.

இக்கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டத்தில், முன்னணியில் நின்று உழைத்துவரும் அனைத்துப் பணியாளர்களுக்கும், திருஅவை, தன் நன்றியை வெளியிடுவதாகவும் உரைத்த பேராயர் Palmer-Buckle அவர்கள்,  இத்துன்பகரமான வேளையில், இறைப்பாதுகாப்பை வேண்டி தொடர்ந்து செபித்துவருவதாகவும் தெரிவித்தார்.

ஆயர் பேரவையின் இந்நிதியுதவியை பெற்ற வேளையில், தலத்திருஅவைக்கு அரசின் நன்றியை வெளியிட்ட அரசு அதிகாரி, Jude Kofi Bucknor அவர்கள், இந்நிதியுதவியை மிகப்பொறுப்புடன், கொள்ளைநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

04 May 2020, 13:20