தேடுதல்

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்தேயு 28:19) - விண்ணேற்றத்திற்குமுன் இயேசு வழங்கிய அன்புக்கட்டளை “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்தேயு 28:19) - விண்ணேற்றத்திற்குமுன் இயேசு வழங்கிய அன்புக்கட்டளை 

ஆண்டவரின் விண்ணேற்றம் - ஞாயிறு சிந்தனை

நல்ல, நம்பிக்கை தரும் செய்திகளின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து துவங்கவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஆண்டவரின் விண்ணேற்றம் - ஞாயிறு சிந்தனை

புகழ்பெற்ற விவிலியப் போதகர், பில்லி கிரஹாம் (Billy Graham) அவர்களது உரைகளை, தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி, ஒருநாள், கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார். "அன்பு ஐயா, நற்செய்தியைப் போதிக்கும்படி, கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.

சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து, அந்த இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட, எனக்கு, கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் நற்செய்தி போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே, உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.

உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப் போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருளுக்கு நம்மை அழைத்துவருகிறது. இப்பெருவிழாவின் கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம் அடைந்த நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்தேயு 28:19) என்ற கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும் குறிப்பிட்டுள்ளன.

'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம் எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே இவ்விழா நமக்கு உணர்த்தும் முதல் உண்மை. அடுத்து, பறைசாற்றும் பணிகளை ஆற்ற சிறந்த இடங்கள், கோவில், பிரசங்க மேடை, மக்கள் கூடிவரும் அரங்கம் என்ற கற்பனைகளை நீக்கவும், இவ்விழா நம்மை அழைக்கிறது.

நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் சீடர்களை இறுதியாகச் சந்தித்த நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, கலிலேயாவில் நிகழ்ந்ததென்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுவது, நம் கவனத்தை ஈர்க்கிறது.

இயேசு வாழ்ந்த காலத்தில், யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில், எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த யூதேயா, உயர்ந்த, புனிதமிக்க பகுதியாகக் கருதப்பட்டது. இதற்கடுத்திருந்த சமாரியா பகுதியோ, இஸ்ரயேல் மக்களின் பார்வையில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. வடக்கில், ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த கலிலேயா, பிற இனத்தாருடன் கலப்படம் கொண்ட பகுதியாக, புனிதம் குறைந்த பகுதியாகக் கருதப்பட்டது.

இயேசு, தன் நற்செய்தியை அறிவிக்க, இறையரசை அறிமுகப்படுத்த, கலிலேயாவைத் தேர்ந்தெடுத்தார் (மத். 4:12-17). கலிலேயக் கடற்கரையில் அவர் தேர்ந்தெடுத்த சீடர்களுடன் இறுதி சந்திப்பை மேற்கொண்டது, மீண்டும் கலிலேய மலைப்பகுதியே! தன் பணிவாழ்வைத் துவக்கிய அதே பகுதிக்கு, தான் சீடர்களைத் தேர்ந்தெடுத்த அதே பகுதிக்கு, தன் சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி துவங்கவேண்டும் என்று இயேசு பணிக்கிறார். நற்செய்தியைப் பறைசாற்றுதல், சீடர்களை உருவாக்குதல் போன்ற உன்னத பணிகள், அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் துவங்கவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியே இயேசு நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறார். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இதுவே!

ஏனைய ஆண்டுகளை விட இவ்வாண்டு, விண்ணேற்றப் பெருவிழாவை நாம் இல்லங்களில் இருந்தவண்ணம் கொண்டாடுவது, இவ்விழாவின் கருப்பொருளை, அதாவது, நற்செய்தியின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நாம் வாழும் சூழல்களில் உருவாகவேண்டும் என்ற கருப்பொருளை மீண்டும் நம் உள்ளங்களில் பதிக்க வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்போ என்று எண்ணத் தோன்றுகிறது.

கடந்த சில வாரங்களாக, பொது வழிபாடுகளுக்கு கோவில்கள் மூடப்பட்ட நிலையில், நம் இல்லங்கள், வழிபாட்டுத் தலங்களாக மாறியிருக்க வாய்ப்புண்டு. தொலைக்காட்சி அல்லது ஏனைய ஊடகங்கள் வழியே, நற்செய்தியின் பறைசாற்றல், இல்லங்களில் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்த வாய்ப்புக்களை நாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளோம் என்பதை சிந்திப்பது நல்லது. இனிவரும் நாள்களில், தொடர்ந்து, நம் இல்லங்களை ஆலயங்களாக மாற்றவும், நம் குடும்பங்களில் நற்செய்தியின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நடைபெறவும், இறைவன் நம்மை வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

இல்லங்களில், விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடும் வேளையில், இயேசு நம் இல்லங்களைத் தேடிவருவதாகவும், உலகெங்கும் சென்று சீடர்களை உருவாக்குதல், நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்பவை, பிரம்மாண்டமான பணிகள் என்றாலும், அவை நம் இல்லங்களில், அடக்கமாக, அமைதியாக துவங்கவேண்டும் என்ற அன்புக்கட்டளைகளை அவர் வழங்குவதாகவும் கற்பனை செய்வது பயனளிக்கும்.

'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர், 'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில், நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில், Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை மேற்கொள்ள இத்தகைய வானூர்தியைப் பயன்படுத்தின. அதே முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய வாசகங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, வானூர்தியிலிருந்து, ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள் போல், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தியிலிருந்து, நற்செய்தி பாடல்கள் மிகச் சப்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டன. மக்கள் அதைக் கேட்டு தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. விவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த 'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர்.

நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும் நம்பி, பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை, இறைவனிடமிருந்தும், நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை, ஜோ பெய்லி அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார்.

மே 24, இஞ்ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில், 54வது உலக சமூகத் தொடர்பு நாள் சிறப்பிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாவலர் என்று கருதப்படும் புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் (St Francis de Sales) அவர்களின் திருநாளான சனவரி 24ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளுக்குரிய செய்தியை, திருத்தந்தையர் வெளியிட்டு வருகின்றனர்.

2020ம் ஆண்டு, சனவரி 24ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட வேளையில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தைப் பற்றிய விவரங்கள், அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே வெளியாகியிருந்தன. இச்செய்தியை வெளியிட்ட வேளையில், இந்நோயின் உலகளாவிய பரவலையோ, அதன் விளைவாக நம்மீது சுமத்தப்பட்ட முழு அடைப்பையோ குறித்து, திருத்தந்தை, எள்ளளவும் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அவர் இவ்வாண்டுக்கென தேர்ந்தெடுத்த தலைப்பும், அதனுடன் இணைத்திருந்த விவிலிய மேற்கோளும், இன்றைய நிலையை, பொருத்தமாகப் பிரதிபலிக்கின்றன.

“நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வாயாக" (வி.ப. 10:2) என்று, விடுதலைப் பயண நூலில் காணப்படும் மேற்கோளையும், "வாழ்வு வரலாறாக மாறுகிறது" என்ற சொற்களையும், திருத்தந்தை, இச்செய்தியின் தலைப்பாக வழங்கியுள்ளார். எகிப்தில் ஏற்பட்ட பத்து பெருந்துன்பங்கள் (கொள்ளை நோய்கள்), விடுதலைப்பயண நூலின் 7ம் பிரிவில் துவங்கி, 12ம் பிரிவு முடிய விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்கள் பரவிவந்த காலத்தில், ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம், என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" (வி.ப. 10:1-2) என்று கூறிய அந்த வாக்கியங்களின் ஒரு பகுதி, 54வது உலக சமூகத் தொடர்பு நாளின் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய உண்மைகளாகத் தெரிகின்றன. 'கதை சொல்லுதல்' என்பதை மையக்கருத்தாகக் கொண்டு, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியின் ஒரு சில கூற்றுகள் இதோ:

"இவ்வாண்டின் செய்தியை 'கதை சொல்லுதல்' என்ற பொருளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். உண்மைகள் அடங்கிய நல்ல கதைகளை நாம் உருவாக்கவேண்டும். கட்டியெழுப்பும் கதைகள் வேண்டும், சீரழிக்கும் கதைகள் அல்ல. நம்மைச் சுற்றி ஓலமிடும் பல்வேறு குரல்கள் நடுவே, மனிதத்தின் அழகை வெளிப்படுத்தும் கதைகள் வேண்டும்...

"உயர்தர தொழில் நுட்பங்களின் உதவியுடன், பொய்மை, இன்று, கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது. இந்தப் பொய்மையை நிராகரிக்கும் துணிவு நமக்குத் தேவை. உண்மையான, அழகான, நன்மை தரும் கதைகளை உருவாக்கவும், வரவேற்கவும் நமக்கு ஞானம் தேவை. ஒவ்வொருநாளும் வெளிப்படும் நமது அடிப்படை நன்மைத்தனத்தைக் கூறும் கதைகளைக் கண்டுபிடிக்கும் பொறுமையும், பகுத்தறிதலும் நமக்குத் தேவை."

கொரோனா தொற்றுக்கிருமியைப்பற்றி வெளிவந்த, இன்னும் வெளிவந்துகொண்டிருக்கும் விவரங்களில் பெரும்பாலானவை, நம் நம்பிக்கையைக் குலைத்துள்ளன. இவற்றின் நடுவே, ஆங்காங்கே, மனிதத்தை உயர்த்திப்பிடிக்கும் கதைகளும் பேசப்படுகின்றன.

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவையும், 54வது உலக சமூகத் தொடர்பு நாளையும் கொண்டாடும் இந்நாளில், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்று இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை ஏற்று, தங்கள் வாழ்வின் வழியே நற்செய்தியைப் பறைசாற்றிவருவோரை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம். கொரோனா தொற்றுக்கிருமியின் கோரப்பிடியிலிருந்து மக்களை, குறிப்பாக, வறியோரை காக்க போராடிவரும் அன்புள்ளங்கள் அனைவருக்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

நல்ல, நம்பிக்கை தரும் செய்திகளின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து துவங்கவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2020, 14:05