தேடுதல்

Vatican News
ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின்( COMECE) இலச்சினை ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின்( COMECE) இலச்சினை  

ஐரோப்பிய நாடுகள் மீண்டுவரும் திட்டங்கள், நீதியானதாக...

கோவிட் 19 நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மீண்டுவரும் திட்டங்கள், நீதியானதாக, வலுவற்றோருக்கு ஆதரவளிப்பதாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக அமைய வேண்டும் – ஐரோப்பிய ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தாக்கத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் மீண்டுவருவதற்கு ஐரோப்பிய கழகத்தின் தலைவர் Ursula von der Leyen அவர்கள், 750 பில்லியன் யூரோக்கள் நிதி உதவிக்கு விடுத்திருக்கும் அழைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

தற்போது உருவாகியுள்ள இந்த நெருக்கடி நிலை, ஐரோப்பிய நாடுகள் இன்னும் உறுதியாக ஒன்றிணைந்து வருவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான COMECEன் சமுதாய விவகாரங்கள் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Antoine Hérouard அவர்கள் மே 28 இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் திட்டங்கள், நீதியானதாக, வலுவற்றோருக்கு ஆதரவளிப்பதாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்று ஆயர் Hérouard அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

கோவிட் 19 நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் திட்டங்கள், படைப்பாற்றல் மிக்கதாக, தற்போதைய நிலைகளிலிருந்து மாறுபட்டதாக, மனித குலத்தின் பொதுவான நலனை முன்னிறுத்துவதாக அமையவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டின் உயிர்ப்புப்பெருவிழா செய்தியில் கூறியிருந்ததை, ஆயர் Hérouard அவர்கள் நினைவுறுத்தியுள்ளார்.

இவ்வுலகை பல்வேறு வழிகளில் சிதைத்துள்ளதால் உருவாகியுள்ள நலமற்ற பூமிக்கோளத்தில், மனிதர்கள் மட்டும் நலமாக வாழமுடியாது என்பதை நமக்கு இந்தக் கிருமி சொல்லித்தந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஆயர் Hérouard அவர்கள், எந்த ஒரு மீளமைப்பு திட்டமும் நம் பூமிக்கோளத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

28 May 2020, 14:37