தேடுதல்

Vatican News
தாக்குதல் இடம்பெற்ற இடங்களை கர்தினால் கடந்த ஆண்டு பார்வையிட்டபோது தாக்குதல் இடம்பெற்ற இடங்களை கர்தினால் கடந்த ஆண்டு பார்வையிட்டபோது   (AFP or licensors)

வாழும் உரிமையும், நாட்டின் சட்டமும் அனைவருக்கும் பொதுவானவை

கர்தினால் இரஞ்சித் : உயிர்ப்புப் பெருவிழா நாளின் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்ந்துவரும் அதிகாரிகளை அச்சுறுத்துவதும், முடக்க நினைப்பதும், பெருங்குற்றம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வாழ்வதற்கென செல்வந்தர்கள் பெற்றிருக்கும் அதே உரிமையை, கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின்போது குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களும் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், இலங்கையின் கொழும்பு கர்தினால் மால்கம் இரஞ்சித்.

2019ம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்களின்போது, கிறிஸ்தவ ஆலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பணம் மற்றும் செல்வாக்கு நிறையப்பெற்ற சிலரால் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், அனைவருக்கும் வாழும் உரிமை ஒன்றே என்பதை, ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா நாளின் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்ந்து வரும் அதிகாரிகளை அச்சுறுத்துவதும், மனித உரிமைகள் என்ற போர்வையில் குற்றங்களை மறைக்க  முயல்வதும், பெருங்குற்றம் என கூறினார் கர்தினால் இரஞ்சித்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால், குண்டு வெடிப்புகள் குறித்த விசாரணைகளின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது தவறு எனவும் கூறும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், தவறிழைத்தோரை எவ்வித பாரபட்சமும் இன்றி கண்டறிய வேண்டியது, நீதித்துறையின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று நடைபெற்ற தாக்குதல்களில், 279 பேர் உயிரிழந்தனர், மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர். இது குறித்த விசாரணைகள், ஓராண்டு தாண்டியும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. (UCAN)

26 May 2020, 14:20