தேடுதல்

Vatican News
பேராயர் Pierbattista Pizzaballa பேராயர் Pierbattista Pizzaballa 

ஜோர்டன், பாலஸ்தீனா மாணவர்களின் நிதியுதவிக்கு...

ஜோர்டன் மற்றும், பாலஸ்தீனாவிலுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி உடனடியாக வழங்கப்படவில்லையெனில், அப்பகுதியிலுள்ள இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையைச் சார்ந்த பள்ளிகளை மூடவேண்டிய நிலை உருவாகும்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

தற்போதைய கொள்ளைநோயின் தாக்கத்தால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியால், ஜோர்டன் மற்றும், பாலஸ்தீனாவிலுள்ள 38 பள்ளிகளில் கல்விபயிலும், 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிக்காக விண்ணப்பித்துள்ளார், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை நிர்வாகி அப்போஸ்தலிக்க பேராயர் Pierbattista Pizzaballa.

கோவிட்-19 நெருக்கடியால், ஜோர்டன் மற்றும், பாலஸ்தீனாவிலுள்ள குடும்பங்கள், கல்விக்கட்டணத்தை செலுத்த இயலாமல் உள்ளனர் என்றும், இந்த மாணவர்களுக்கு நிதியுதவி உடனடியாக வழங்கப்படவில்லையெனில், இந்தப் பள்ளிகளை  மூடவேண்டிய நிலை உருவாகும் என்றும், பேராயர் Pizzaballa அவர்கள் தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள், கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு கடுமையாய் முயற்சித்துவரும்வேளை, பல குடும்பங்கள் இக்கட்டணத்தைச் செலுத்த இயலாமல் உள்ளனர் என்பதையும், சுட்டிக்காட்டினார், பேராயர் Pizzaballa.

ஜோர்டன் மற்றும், பாலஸ்தீனாவிலுள்ள, இலத்தீன் வழிபாட்டுமுறை பள்ளிகளில் பயிலும் 12,456 குடும்பங்களின் மாணவர்களுக்குத் தேவைப்படும் நிதி வழங்கி, அவர்களை ஆதரிக்குமாறு, உலகளாவிய சமுதாயத்தை, பேராயர் Pizzaballa அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேலும், இப்பள்ளிகளின் நிலவரம் குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்ட துணை ஆயர் Giacinto-Boulos Marcuzzo அவர்கள், ஜோர்டன் மற்றும், பாலஸ்தீனாவிலுள்ள பள்ளிகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, கிறிஸ்தவ மற்றும், முஸ்லிம் மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றும், இந்த 38 பள்ளிகளில் சில பள்ளிகள், 19ம் நூற்றாண்டிலிருந்தே செயல்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

23 May 2020, 13:45