தேடுதல்

Vatican News
இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புக்கள் இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புக்கள் 

இஸ்ரேல் அரசின் இணைப்புக்கொள்கை, கடுமையானது

ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும், ஜோர்டன் பள்ளத்தாக்கு மீது, இஸ்ரேலின் இறையாண்மையை அறிவித்து, வருகிற ஜூலை முதல் தேதியிலிருந்து, புதிய வீடுகள் கட்டும் திட்டம் - இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் Benjamin Netanyahu

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்குமிடையே அமைதியான தீர்வு கிடைப்பதற்கு முன்வைக்கப்படும் ஒருதலைச்சார்பான திட்டங்கள் குறித்து, எருசலேம் முதுபெரும் தந்தையரும், கிறிஸ்தவத் தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கென மேற்கொள்ளப்படும் அமைதியான ஒப்பந்தங்கள் குறித்த நடைமுறைகளில் எழும் சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன என்று, அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா போன்ற உலக சக்திகளால் முன்வைக்கப்படும் ஒருதலைச்சார்பான திட்டங்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், West Bankல், குடியிருப்புக்களை விரிவுபடுத்தும் நோக்கத்தில், யூதக் குடியேற்றதாரர்கள், பாலஸ்தீனியர்களைத் தாக்கி வருவது, அண்மை வாரங்களில் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளனர். 

அதேநேரம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவுடன், இஸ்ரேல் அதிகாரிகள், ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான புதிய குடியிருப்புக்களைக் கட்டுவதற்கு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவத் தலைவர்கள்.

இதற்கிடையே, ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும், ஜோர்டன் பள்ளத்தாக்கு மீது, இஸ்ரேலின் இறையாண்மையை அறிவித்து, வருகிற ஜூலை முதல் தேதியிலிருந்து, புதிய வீடுகள் கட்டும் திட்டத்தைத் தொடங்குவதாக, இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் Benjamin Netanyahu அவர்கள் அறிவித்துள்ளார் என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)

08 May 2020, 14:27