தேடுதல்

Vatican News
புயல்கால பணியில் தன்னார்வத் தொண்டர்கள் புயல்கால பணியில் தன்னார்வத் தொண்டர்கள்  (AFP or licensors)

அம்ஃபான் புயல் பணியில் கத்தோலிக்க அமைப்புக்கள்

இந்தியாவையும், பங்களாதேஷ் நாட்டையும் சூழ்ந்திருக்கும் அம்ஃபான் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்கள் முன்வந்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவையும், பங்களாதேஷ் நாட்டையும் சூழ்ந்திருக்கும் அம்ஃபான் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து, கத்தோலிக்க தன்னார்வத் தொண்டர்களும், மற்ற சமுதாய ஆர்வலர்களும் மக்களை ஆபத்துப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று, கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் சமுதாயப்பணி மையத்தின் இயக்குனர் அருள்பணி ஃபிராங்க்ளின் மெனேசஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.
வங்காள விரிகுடா பகுதியில் இதுவரை பதிவாகியுள்ள புயல்கள் அனைத்தையும் விட மிக வலிமையான புயல் என்று கூறப்படும் அம்ஃபான் புயல், மே 16ம் தேதி வங்கக்கடலில் உருவாகி, மே 20 இப்புதனன்று கரையைக் கடக்கும் என்றும், இது, 200க்கும் அதிகமான கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.
மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை, இப்புதன் மாலையில் கடக்கும் அம்ஃபான் புயலால் ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும், இவர்களை, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்வதோடு, இவர்களிடையே தொற்றுக்கிருமியின் தாக்கம் பரவாமல் இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கு வங்க அரசும், பங்களாதேஷ் அரசும் முயன்று வருகின்றன.
ஏற்கனவே கோவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள வேளையில், அம்ஃபான் புயலிலிருந்து மக்களைக் காக்க இன்னும் பல இடங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்று, பங்களாதேஷின் குல்னா காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான Jibon Das அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார். (CNA)
 

20 May 2020, 14:56