தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் காரித்தாஸின் உதவிகள் பாகிஸ்தான் காரித்தாஸின் உதவிகள்  

தொழிலாளர் நிவாரண நிதி திட்டத்திற்கு வரவேற்பு

தொழிலாளர் உலக நாள் சிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள், 7,500 கோடி ரூபாய் (75 பில்லியன்) நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமி பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முன்னிட்டு, தொழிலாளர் மற்றும், வேலையிழந்த மக்களுக்கென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் அறிவித்துள்ள நிவாரண நிதி திட்டத்தை வரவேற்றுள்ளது, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.

தொழிலாளர் உலக நாள் சிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள், 7,500 கோடி ரூபாய் (75 பில்லியன்) நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் இத்திட்டத்தை வரவேற்றுப் பேசியுள்ள, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் செயலர் Mansha Noor அவர்கள், தினக்கூலிகள் மற்றும், தொழிலாளர்களுக்கு அரசு வழங்கவுள்ள இந்த நிவாரணத் திட்டம் நல்ல முயற்சி என்று கூறினார்.  

இந்த மக்கள், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் மற்றும், புறக்கணிக்கப்பட்ட வகுப்பினர் என்றும், இவர்கள், எந்தவித சமுதாய பாதுகாப்புத் திட்டத்திலும் இணைக்கப்படாதவர்கள் என்றும், Noor அவர்கள், யூக்கா செய்தியிடம் எடுத்துரைத்தர்.

பாகிஸ்தான் அரசு, இத்திட்டத்தில், மீனவர்கள் மற்றும், வீட்டுவேலை செய்பவர்களையும் இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள நூர் அவர்கள், கோவிட்-19 விதிமுறைகளால், கடல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பவர்கள் மற்றும், இந்த இரமதான் புனித மாதத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறைக்கவும்     காரித்தாஸ் உதவி வருகிறது என்று கூறினார்.

பாகிஸ்தான் அரசின் 7,500 கோடி ரூபாய் நிவாரண திட்டம் குறித்து செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த, அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் Hammad Azhar அவர்கள், கடவுள் விரும்பினால், இத்திட்டத்தினால், நாற்பது இலட்சம் முதல், அறுபது இலட்சம் பேருக்கு உதவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அறிவித்தார்.

தற்போதைய அரசின் திட்டத்தின்படி, வேலையில்லாத ஒவ்வொருவருக்கும், 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறிய Azhar அவர்கள், Ehsaas 8 பில்லியன் டாலர் திட்டத்தின்கீழ், ஏற்கனவே 12 கோடிப் பேர் வரை உதவி பெறுகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார். (UCAN)

01 May 2020, 13:04