தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் சாக்கோ திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் சாக்கோ  (ANSA)

கர்தினால் சாக்கோ: ஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை

ஐ.நா. பொதுச் செயலர் – ஈராக்கில் சனநாயகத்தை உறுதிப்படுத்தவும், நாட்டு மக்கள் அனைவரையும் சிறந்ததோர் இடத்தில் வைக்கவும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கின் புதிய பிரதமர் Mustafa al-Kadimi அவர்கள், நாட்டிற்காக ஆற்றிய முதல் உரையில், வருங்காலத்திற்கென அறிவித்த திட்டங்கள், நாட்டினர் அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன என்று, அந்நாட்டு கத்தோலிக்க முதுபெரும் தந்தை அவர்கள் கூறியுள்ளார்.

ஈராக்கில் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற முயற்சிகளுக்குப்பின், மே 6, இப்புதனன்று, அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு குறித்து, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்கள், புதிய அரசு, ஈராக்கின் வருங்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

புதிய பிரதமர் நேர்மையாளர், அவர் ஈராக்கின் நன்மையை விரும்புகிறார் மற்றும், தரமான அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று, புதிய அரசின் மீது தனக்குள்ள நல்லெண்ணங்களை எடுத்துரைத்தார், கர்தினால் சாக்கோ.

நீண்டகாலமாகத் துன்புறும் ஈராக் நாட்டிற்கு, தற்போது ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் தேவைப்படுகின்றன என்பதையும் வலியுறுத்திய கர்தினால் சாக்கோ அவர்கள், கத்தோலிக்கர், புதிய அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஈராக் புதிய அரசு பற்றி ஐ.நா.

மேலும், ஈராக்கின் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், சனநாயகத்தை உறுதிப்படுத்தவும், நாட்டு மக்கள் அனைவரையும் சிறந்ததோர் இடத்தில் வைக்கவும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.   

ஈராக்கின் புதிய அரசின் 22 உறுப்பினர்கள் கொண்ட காபினெட் அவையில் குறைந்தது, ஏழு பேராவது பெண்களாக இருக்க வேண்டும் என்பதையும், எண்ணெய் மற்றும் வெளியுறவுத் துறைகளுக்கு, கவனமாக அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கூட்டேரஸ் அவர்கள், தன் வாழ்த்து செய்தியில் வலியுறுத்திள்ளார்.(UN)

08 May 2020, 14:13