தேடுதல்

Vatican News
CAFOD அமைப்பு வழியாக ஆப்பிரிக்காவில் பணியாற்றும் அருள்சகோதரி consilia CAFOD அமைப்பு வழியாக ஆப்பிரிக்காவில் பணியாற்றும் அருள்சகோதரி consilia 

சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படவேண்டும்

CAFOD : ஏழை நாடுகளில், உணவு, சுத்தக் குடிநீர் வழங்குதல், பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் போன்றவைகளே, தற்போது தங்கள் முதல் குறிக்கோளாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது உலகம் முழுவதும், தொற்றுநோய்ப் பிரச்சனையால் துன்புறும்வேளையில், ஏழை நாடுகளின் சார்பாக அவசர விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, பிரிட்டனின் கத்தோலிக்க CAFOD அமைப்பு.
வளரும் நாடுகளின் ஏழை மக்கள், இத்தொற்று நோயால் இறப்புக்களை மட்டுமல்ல, வருங்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையையும் எதிர்நோக்கிவருகின்றனர் என்ற CAFOD உதவி அமைப்பு, ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள் ஆகியவைகளின் நிலை குறித்தும், சிரியா, தென் சூடான், மற்றும், பங்களாதேசில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் குறித்தும், அச்சம் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
நிதியுதவியை அல்ல, மாறாக, அனைத்து சமுதாயங்களும் இத்துன்ப வேளையில் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது, இந்த கத்தோலிக்க அமைப்பு.
ஏழை நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்கக் கண்டத்தில், ஏழை மக்களுக்கு உணவுப்பொருட்களையும், கை சுத்திகரிப்பு திரவங்களையும், அப்பகுதி தலத்திருஅவைகள் வழியாக வழங்கி வருவதாகக் கூறும் CAFOD அமைப்பு, உணவு, சுத்தமான குடிநீர் வழங்குதல், பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் போன்றவைகளே, தற்போது தங்கள் முதல் குறிக்கோளாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஐ.நா.வின் அண்மைய ஆய்வறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோய், உடனடியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஆப்ரிக்காவில் மூன்று இலட்சம் முதல் முப்பத்து மூன்று இலட்சம் உயிர்களை நாம் இழக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.(ICN)
 

05 May 2020, 13:48