தேடுதல்

Vatican News
"கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?" - மாற்கு 8:18 "கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?" - மாற்கு 8:18 

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 1

உணர்ந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல், நடந்தவற்றைப்பற்றிய நினைவில்லாமல், ஒருவர் வாழும்போது, கண்ணிருந்தும் காண இயலாமல் போவதற்கு வாய்ப்புண்டு என்ற பாடத்தை இயேசு நம் அனைவருக்குமே சொல்லித்தருகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 1

ஏனைய மூன்று நற்செய்திகளில் பதிவாகாமல், மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இரண்டாவது புதுமையில் இன்று நம் தேடல் பயணம் துவங்குகிறது. பெத்சாய்தா என்ற ஊரில், பார்வையற்ற ஒருவர் நலமடையும் இப்புதுமை, மாற்கு நற்செய்தி 8ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பார்வைத் திறனற்றவர்களுக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமைகள், நான்கு நற்செய்திகளிலும் ஆறு முறை பதிவாகியுள்ளன. இப்புதுமைகள் ஒவ்வொன்றிலும், அப்புதுமையோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்கள், நமக்கு பாடங்களாக அமைகின்றன.

ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும், இறுதிப் புதுமையாக பதிவாகியுள்ள, பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வில், அம்மனிதர், உடலளவில் பார்வையற்றவராக இருந்தாலும், இயேசுவை, 'தாவீதின் மகனே' என்றழைத்ததன் வழியே, அவர் தன் மனக்கண்களால் இயேசுவின் உண்மை அடையாளத்தைக் கண்டுகொண்டார் என்பதை, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

யோவான் நற்செய்தியின் 9ம் பிரிவில் பதிவாகியுள்ள புதுமை, புறக்கண்களில் பார்வை பெறுதலும், அகக்கண்களில் பார்வை பெறுதலும் என்ற கருத்துக்களை உணர்த்துகின்றன என்பதை நாம் ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம். யோவான் நற்செய்தி 9ம் பிரிவில், காணப்படும் 41 இறைவாக்கியங்களில், இரு இறைவாக்கியங்கள் (யோவான் 9:6-7) மட்டுமே, இந்தப் புதுமை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறுகின்றன. ஏனைய 39 இறைவாக்கியங்களில், இப்புதுமைக்கு முன்னரும், பின்னரும் நி்கழும் விவாதங்கள் வழியே, நற்செய்தியாளர் யோவான், ஒருசில இறையியல் பாடங்களை நமக்கு வழங்குகிறார்.

இப்புதுமைக்கு முன்னதாக, சீடர்கள், இயேசுவிடம், “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” (யோவான் 9:2) என்று எழுப்பும் கேள்வியும், அதற்கு, இயேசு கூறும் விளக்கமும் 5 இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. இப்புதுமைக்குப் பின்னர், 34 இறைவாக்கியங்களில், நற்செய்தியாளர் யோவான், ஓர் இறையியல் பாடத்தை நமக்கு வழங்குகிறார்.

இப்புதுமை, ஓய்வுநாள் ஒன்றில் நிகழ்ந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரசாரமான ஒரு விவாதத்தில், பார்வை பெற்றவர், படிப்படியாக, இயேசுவைப்பற்றி தெளிவான பார்வை பெறுவதும், பரிசேயர்கள், தங்கள் முற்சார்பு எண்ணங்களால், படிப்படியாக பார்வை இழப்பதும் தெளிவாகின்றன. உடலளவில் பார்வை பெறுவது ஒரு புதுமை என்றாலும், உள்ளத்தளவில் ஒருவர் பார்வை பெறுவது, அதைவிட முக்கியம் என்பது, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்.

இதே பாடத்தை, மாற்கு நற்செய்தி 8ம் பிரிவில் இடம்பெற்றுள்ள இப்புதுமையிலும் நாம் உணரலாம். இப்புதுமைக்கு முன்னதாக, நற்செய்தியாளர் மாற்கு பதிவு செய்துள்ள ஒரு நிகழ்வு, கண்ணிருந்தும் காண முடியாத சீடர்களின் நிலையை விவரிக்கிறது. பார்வையற்ற ஒருவர் பார்வை பெறும் புதுமை நிகழ்வதற்கு முன்னர், உள்ளத்தில் பார்வை பெறுவது தேவை என்ற பாடம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

மாற்கு நற்செய்தி 8ம் பிரிவின் ஆரம்பத்தில், இயேசு 4000 பேருக்கு உணவளித்த புதுமை பதிவாகியுள்ளது (மாற்கு 8:1-10). அதைத் தொடர்ந்து, இயேசுவுக்கும், பரிசேயருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு குறுகிய விவாதம் பதிவாகியுள்ளது (மாற்கு 8:11-12). இந்த விவாதத்தைத் தொடர்ந்து, இயேசு தன் சீடர்களுடன் படகில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் நிகழ்ந்ததை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

மாற்கு 8:13-21

அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி இயேசு மறுகரைக்குச் சென்றார். சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?" என்று அவர் கேட்க, அவர்கள் "பன்னிரண்டு" என்றார்கள். "ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க, அவர்கள், "ஏழு" என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கேட்டார்.

தான் ஆற்றிவரும் புதுமைகளை நேரடியாகக் கண்டிருந்தும், தன் சீடர்களின் உள்ளங்களில் நம்பிக்கையற்ற, கவலை சூழ்ந்த நிலை உருவாகியிருந்ததைக் கண்ட இயேசு, மனவேதனையுடன் கேள்விகளை எழுப்புகிறார். "கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா?" என்று தன் சீடரிடம் கேட்கும் இயேசு, அக்கேள்விக்கு முன், அவர்கள் தன்னைப்பற்றி உணராமல், புரிந்துகொள்ளாமல் இருப்பதையும், அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருப்பதையும் ஒருவித ஏக்கத்துடன் வெளிப்படுத்துகிறார். அந்தக் கேள்விக்குப் பின், 'உங்களுக்கு நினைவில்லையா?' என்ற அழுத்தந்திருத்தமான கேள்வியை எழுப்பி, 5000 பேருக்கும், 4000 பேருக்கும் தான் உணவளித்த நிகழ்வுகளை அவர்களுக்கு நினைவுறுத்துகிறார்.

உணர்ந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல், நடந்தவற்றைப்பற்றிய நினைவில்லாமல், ஒருவர் வாழும்போது, கண்ணிருந்தும் காண இயலாமல் போவதற்கு வாய்ப்புண்டு என்ற பாடத்தை இயேசு நம் அனைவருக்குமே சொல்லித்தருகிறார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சுற்றுச்சூழலையும், இந்த பூமிக்கோளத்தையும் பற்றிய எவ்வித கவலையும் இன்றி,  அளவு கடந்த வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த மனித வாழ்வு, கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் கட்டாய ஓய்வெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வேளையில், இந்தக் கிருமி மனித சமுதாயத்தின் ஆன்மாவில் ஆழப்பதித்துள்ள சில பாடங்களை உணர்ந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல், நடந்தவற்றைப்பற்றிய நினைவில்லாமல் வாழப்போகிறோமா என்ற கேள்வியை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான Kristin Flyntz என்பவர், “Dear Humans: An Imagined Letter from Covid-19”, அதாவது, "அன்பு மனிதப்பிறவிகளே: கோவிட் 19 இடமிருந்து ஒரு கற்பனைக் கடிதம்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஒரு பதிவு, நாம், இதுவரை, எவ்வளவு தூரம் பார்வை இழந்து வாழ்ந்திருக்கிறோம் என்பதைக் கூறுகிறது. கோவிட் 19 கிருமி மனிதப் பிறவிகளுக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து சில வரிகள் இதோ:

நில்லுங்கள். அப்படியே நில்லுங்கள். இது ஒரு வேண்டுகோள் அல்ல, ஒரு கட்டளை.

வெகுவேகமாக, ஓர் இராட்டினத்தைப்போல சுழன்றுகொண்டிருக்கும் உங்கள் வாழ்வை நாங்கள் நிறுத்துவோம்.

உங்கள் விமானங்கள், வாகனங்கள், பள்ளிகள், கடைகள், அனைத்தையும் நிறுத்துவோம்.

உங்கள் ஒளிபரப்பில் தடங்கலை உருவாக்கி, ஒரு செய்தியைச் சொல்வோம்:

நமது உடல்நலம் சரியாக இல்லை.

கடந்த ஆண்டு, உலகின் பல இடங்களில் காடுகள் தீப்பற்றியெரிந்தன; வெள்ளங்கள் பெருகின; பயங்கர வறட்சிகள் பரவின.

இவை எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவில்லை.

இப்போது, இவ்வுலகம் பற்றியெரிந்ததுபோல், உங்கள் உடல், காய்ச்சல் கண்டு, பற்றியெரியும்;

உலகைச் சூழ்ந்த வெள்ளம், இப்போது உங்கள் நுரையீரலைச் சூழ்ந்து, உங்களை மூச்சடைக்கச் செய்யும்.

இவை வழியே நாங்கள் சொல்லவிழைவது இதுதான்:

நமது உடல்நலம் சரியாக இல்லை.

நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்களிடம் வந்திருக்கும் தூதர்கள்.

உங்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இது ஒன்றுதான்:

நில்லுங்கள். அமைதியாகுங்கள். செவிகொடுங்கள்.

நம் பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளத்தைக் காப்பது நம் கடமை என்பதை உணர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு மே 24ம் தேதி, 'இறைவா உமக்கே புகழ்' என்ற பொருள்படும் 'Laudato si' என்ற திருமடலை வெளியிட்டார். அந்த மடல் வெளியானதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, மே 17 இஞ்ஞாயிறு முதல், மே 24, வருகிற ஞாயிறு முடிய, 'Laudato si' வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம், படைப்பின் மீது நம் பார்வையைத் திருப்பும் வண்ணம் ஒரு சில பாடங்களை கற்றுத்தந்துள்ளதை வரம்நிறைந்த ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? (மாற்கு 8:17-18) என்று தன் சீடர்களிடம் கேள்விகளை எழுப்பிய இயேசு, இன்று நம்மிடையிலும் அதே கேள்விகளை எழுப்பி வருகிறார். கண்ணிருந்தும் காணாமல் வாழப்போகிறோமா? நமது பதில் என்ன?

வேதனையுடன் தன் சீடர்களிடம் இயேசு கேள்விகளை எழுப்பிய இந்நிகழ்வையடுத்து, பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையை, நற்செய்தியாளர் மாற்கு இணைத்துள்ளார். இந்தப் புதுமையில், நம் தேடல் பயணம், அடுத்தவாரம் தொடரும்.

19 May 2020, 12:01