தேடுதல்

கோவிட்-19 காலத்தில் பங்களாதேஷ் கோவிட்-19 காலத்தில் பங்களாதேஷ்  

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறரன்புக்கு அழைப்பு

கோவிட்-19 நெருக்கடி சூழலில், பங்களாதேஷ் கத்தோலிக்கர் கொண்டிருக்கும் ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு, ஆண்டவரைப் போற்றிப் புகழ்கிறேன் - கர்தினால் Patrick D’Rozario

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் வாழ்வில் கடவுளின் தலையீட்டைச் செபத்தில் கண்டுணருமாறும், நன்கொடைகள் வழங்கி வறியோர் மற்றும், தேவையில் உள்ளவர்களுக்கு உதவுமாறும், பங்களாதேஷ் கர்தினால் Patrick D’Rozario அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   

கடவுளில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை பரிசோதிக்கப்படும் இக்காலக்கட்டத்தில், அவர்மீது நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம் என்று கூறியுள்ள, டாக்கா பேராயர், கர்தினால் D’Rozario அவர்கள், மே 14, வருகிற வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, செபம் மற்றும், நோன்பைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.   

இவ்வாறு தன் மேய்ப்புப்பணி அறிக்கையில் கூறியுள்ள கர்தினால் D’Rozario அவர்கள், மே 14ம் தேதியன்று, இரக்கச் செயல்களையும் ஆற்றுமாறு, கத்தோலிக்கரை வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 நெருக்கடி சூழலில், பங்களாதேஷ் கத்தோலிக்கர் கொண்டிருக்கும் ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு, ஆண்டவரைப் போற்றிப் புகழ்வதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு கர்தினால், கடவுளில் நம்பிக்கை வைப்பதன் வழியாக, நாம் ஒருநாள், நம்பிக்கைக்கு முன்வைக்கப்படும் சோதனையை வெற்றிகொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 14ம் தேதி, டாக்கா உயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்து அருள்பணியாளர்களும், விசுவாசிகளுடன் ஆன்மீக முறையில் ஒன்றித்திருந்து, சிறப்பான இறைவேண்டல்களை எழுப்புவார்கள் என்றும், கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.  

இதற்கிடையே, பங்குத்தள அவைகள் மற்றும், வின்சென்ட் தெ பால் கழகத்திடமிருந்து, ஏறத்தாழ 811 குடும்பங்கள், உதவிகளைப் பெற்றுள்ளன. பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பும், 88,400 டாலர்கள் பெறுமான உதவிகளை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளது. (UCAN)

09 May 2020, 14:55