தேடுதல்

Vatican News
இறை ஊழியர் Michael McGivney இறை ஊழியர் Michael McGivney 

இறை ஊழியர் McGivney, கொள்ளைநோய்க்குப் பலியாகியவர்

இறை ஊழியர் Brésillac, இந்தியாவில் 12 ஆண்டுகள் மறைப்பணியாற்றியவர். இவர், தனது 29வது வயதில் கோயம்புத்தூர் ஆயராக நியமிக்கப்பட்டார். இந்திய அருள்பணியாளர்களை உருவாக்குவதில், இவர் காட்டிய ஆர்வத்தால் எதிர்ப்புக்களைச் சந்தித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள இறை ஊழியர் Michael McGivney அவர்கள், 19ம் நூற்றாண்டில் உலகைத் தாக்கிய ஒருவகை கொள்ளைநோயால் உயிரிழந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை ஊழியர் McGivney அவர்கள், 1882ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டில், Knights of Columbus எனப்படும், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பை உருவாக்கியவர்.

2019ம் ஆண்டின் நிலவரப்படி, உலக அளவில் செயல்படும் இவ்வமைப்பில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், உலகில் உதவி தேவைப்படும் கத்தோலிக்க அமைப்புகள், மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு இந்த அமைப்பினர் உதவி வருகின்றனர்.

இறை ஊழியர் McGivney அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 26, இச்செவ்வாயன்று ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் வழியாக, இவர் அருளாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு திருத்தந்தை அனுமதியளித்துள்ளார்.

இறை ஊழியர் McGivney அவர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்ட Knights of Columbus அமைப்பு, இவர், 1889ம் ஆண்டுக்கும், 1890ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் உலகைத் தாக்கிய கொரோனா தொற்றுக்கிருமி போன்ற ஒரு கொள்ளைநோயின் மத்தியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார் என்றும், 1890ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, காய்ச்சலால் கடுமையாய்த் தாக்கப்பட்டு, தனது 38வது வயதில் இறைவனடி சேர்ந்தார் என்றும் அறிவித்துள்ளது.

இறை ஊழியர் McGivney அவர்கள், தனது பங்குத்தள கடமைகளுக்கு மத்தியில், James Smith என்ற, 21 வயது நிரம்பிய மரணதண்டனைக் கைதி, தூக்கிலிடப்படும்வரை, அந்தக் கைதியைச் சந்தித்து வந்தார். அந்த இளைஞர் கைதி, குடிபோதையில், காவல்துறை அலுவலகர் ஒருவரைக் கொலை செய்திருந்தார். அந்தக் கைதி, இறை ஊழியர் McGivney அவர்களிடம், தங்களின் புனிதம்நிறைந்த மறைப்பணி, தன்னை மரணத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்துள்ளது, எனக்காக கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut மாநிலத்தில், Waterburyல் 1852ம் ஆண்டு பிறந்த McGivney அவர்கள், 1877ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

Melchior de Marion Brésillac

மேலும், SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையை ஆரம்பித்த, Melchior de Marion Brésillac அவர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 26, இச்செவ்வாயன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின்  Castelnaudary என்ற நகரில் 1813ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்த Brésillac அவர்கள், 1838ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்டார். மறைப்பணியாளராக வேண்டும் என்ற ஆவலில், பாரிஸ் மறைபோதக சபையில் சேர்ந்த இவர், 1842ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி, பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் இளைஞர்களை அருள்பணித்துவ வாழ்வுக்கு பயிற்சியளிக்கும் இல்லத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

இந்தியாவில் 12 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய இவர், தனது 29வது வயதில் கோயம்புத்தூர் ஆயராக நியமிக்கப்பட்டார். நாட்டில் நிலவிய சாதி அமைப்பு கண்டு வருந்தினார். இந்திய அருள்பணியாளர்களை உருவாக்குவதில், இவர் ஆர்வம் காட்டினார். அதனால் அவர் எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், ஆயர் பணியைவிட்டு விலகுவதாக அறிவித்து, உரோம் திரும்பினார்.

பின்னர் திருப்பீடத்தின் அனுமதியுடன், 1856ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையை ஆரம்பித்தார். 1858ம் ஆண்டில், இச்சபையின் முதல் குழு மேற்கு ஆப்ரிக்காவின் சியெரா லியோன் நாட்டிற்குச் சென்றது.

Brésillac அவர்களும், 1859ம் ஆண்டு மே 14ம் தேதி, மேலும் இருவருடன் அந்நாட்டின் Freetown சென்றார். அச்சமயத்தில் அந்நகரைத் தாக்கிய மஞ்சள் காய்ச்சலில், அந்த சபையின் மறைப்பணியாளர்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டனர். Brésillac அவர்களும் 1859ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, அக்காய்ச்சலால் தாக்கப்பட்டு, இறைபதம் சேர்ந்தார். (CNA)

28 May 2020, 14:24