தேடுதல்

Vatican News
தென்னாப்ரிக்காவில் கோவிட்-19 தென்னாப்ரிக்காவில் கோவிட்-19   (ANSA)

கோவிட்-19க்குப்பின் நற்செய்தி அறிவிப்பு குறித்து...

கோவிட் கொள்ளைநோயின் பின்விளைவு, ஏறத்தாழ ஆறு கோடிப் பேரை வறுமைக்கோட்டிற்குக்கீழ் கொண்டுவரும் - உலக வங்கி

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால் உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெறும் இறப்புக்களைப் போன்று, ஆப்ரிக்க கண்டத்தில் இடம்பெறவில்லையென்றாலும், பசியினாலும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லாமையாலும் பெருமளவில் மக்கள் துன்புறுகின்றனர் என்று, ஆப்ரிக்காவில் பணியாற்றும் மறைப்பணியாளர் ஒருவர், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

ஐவரி கோஸ்ட் நாட்டில் மறைப்பணியாற்றும், ஆப்ரிக்க மறைப்பணி கழகத்தைச் சார்ந்த அருள்பணி மாற்கோ பிராதா (Marco Prada) அவர்கள், தற்போது அபிஜான் நகர மக்கள் பெருந்துன்ப நிலைமையை எதிர்கொள்கின்றனர் என்றும், வேலையின்றி உள்ள மக்களுக்கு, எவ்வித ஆதரவும் இல்லை என்றும், மக்களின் வாங்கும்திறன் 80 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் கூறினார்.

ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளதுபோன்று, விவிலியக் காலத்தில் இடம்பெற்றதுபோன்றதொரு பசிக்கொடுமை, தற்போது உலக அளவில் இடம்பெற்றுவருகின்றது என்றும், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் நெருக்கடிநிலையில் உள்ளனர் என்றும் எடுத்துரைத்த அருள்பணி பிராதா அவர்கள், ஐவரி கோஸ்ட் நாட்டின், Korhogo நகரின் பாதிக்கும் அதிகமான மக்கள், ஒரு நாளைக்கும் குறைவான உணவையே கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். (Fides)

உலக வங்கியின் அறிக்கை

இதற்கிடையே, உலக வங்கியின் இயக்குனர் David Malpass அவர்களின் கூற்றுப்படி, கோவிட் கொள்ளைநோய், ஏறத்தாழ ஆறு கோடிப் பேரை வறுமைக்கோட்டிற்குக்கீழ் கொண்டுவரும் என்று தெரியவந்துள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு, 1.90 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை ஆறு கோடியாக இருக்கும் என்ற, உலக வங்கியின் கணிப்பை Malpass அவர்கள் குறிப்பிட்டார். தற்போதைய கொள்ளைநோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள கடும் வறிய நாடுகளுக்கு, 160 பில்லியன் டாலர் கடனுதவியையும் வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

23 May 2020, 13:58