தேடுதல்

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே" - யோவான் 14:6 "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" - யோவான் 14:6 

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், நெருக்கடி நேரங்களில் எவ்வாறு முடிவெடுப்பது, எத்தகைய முடிவெடுப்பது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடிநிலை கட்டுப்பாடுகளிலிருந்து ஒரு சில நாடுகள், வெளியேறத் துவங்கியுள்ளன. மே 4, கடந்த திங்கள் முதல், 'முழு அடைப்பு' என்ற நிலையின் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்புக்காலம் நம்மீது ஒரு பெரும் சுமையாகத் திணிக்கப்பட்டு, நம்மை மூச்சடைக்கச் செய்திருந்தாலும், அந்நாள்களில், நம் பூமிக்கோளம், சிறிது சுதந்திரமாக மூச்சுவிட முடிந்தது என்பதையும் நாம் மறுக்க இயலாது. அதேவண்ணம், நான்கு சுவர்களுக்குள் குடும்பமாக நாம் அடைபட்டிருந்த இக்காலத்தில், நமக்குள் பழுதடைந்திருந்த உறவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதே நேரம், இந்த முழு அடைப்புக்காலம், இல்லங்களில், வன்முறைகளுக்கும் வழிவகுத்தன என்பது, நாம் அறிந்துவரும் வேதனையான உண்மை.

40 நாள்கள் முழுஅடைப்பை நாம் எந்த மனநிலையுடன் ஏற்றுக்கொண்டோம் என்பதைப் பொருத்து, அது, நலமாக இருந்ததா, அல்லது, நரகமாக இருந்ததா என்ற விளைவுகள் உருவாகியிருக்கும். அதேபோல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள இவ்வேளையில், நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி, எத்திசையில் போகும் என்பது, நமது கரங்களில் உள்ளது. முழு அடைப்பு நாள்கள், புதிய வாழ்வைத் துவங்க வழிவகுத்துள்ளதா, அல்லது, நாம் பழைய வாழ்வுக்கே திரும்பிப் போகிறோமா? என்ற கேள்விகளுக்கு நாம்தான் பதில் சொல்லவேண்டும்.

தற்போது துவங்கியுள்ள அடுத்த நிலைக்கென, அரசுகள் அறிவித்திருக்கும் முடிவுகள், நமக்கு, சங்கடத்தை உருவாக்குகின்றன. இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கமும், அதனால் ஏற்பட்ட பல்லாயிரம் உயிர்ப்பலிகளும், நம் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான பாடத்தையும் சொல்லித்தரவில்லை, அவர்களிடம் எள்ளளவும் மாற்றங்களை உருவாக்கவில்லை என்பதை, அவர்கள் அறிவித்திருக்கும் முடிவுகள் பறைசாற்றுகின்றன.

தளர்த்தப்படும் சட்டங்களில், மக்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வர்த்தகத்திற்கு முதலிடம் தரப்பட்டுள்ளது என்பதை, அனைத்து நாடுகளிலும் நாம் காண்கிறோம். இத்தனை நாள்களாக முடங்கிக்கிடந்த வர்த்தகம், முழுவீச்சில் நடைபெறவேண்டும் என்பதே, அரசியல் தலைவர்களின் தலையாயக் குறிக்கோளாக உள்ளது. அரசுகள் காட்டிவரும் இந்த வர்த்தக வெறியின் உச்சக்கட்டத்தை, இந்தியாவில், கடந்த சில நாள்களாகக் காணமுடிகிறது. 40 நாள்களாக மூடிக்கிடந்த மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்குச் செல்ல நிற்கும் மக்களின் வரிசை, மைல் கணக்கில் நீண்டுள்ளது.

தமிழ்நாட்டில், ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் வேதனையைத் தருகின்றன. தமிழக அரசு எடுத்த தவறான முடிவுக்கு, மக்களைக் காரணம் காட்டியிருப்பது, எரியும் வீட்டின் மீது, எண்ணெயை ஊற்றும் முயற்சி!

நம் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும், நெருக்கடியானச் சூழல்கள் எழும்போது, முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதைச் சொல்லித்தர, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம் மத்தியில் முயற்சிகள் செய்தது. அந்தப் பாடங்களை கற்றுக்கொள்ள மறுத்து, நம் உலகம், தன் பழைய நிலைக்கேத் திரும்புவது, நம் நம்பிக்கையைக் குலைக்கிறது.

இத்தருணத்தில், இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், நெருக்கடி நேரங்களில் எவ்வாறு முடிவெடுப்பது, எத்தகைய முடிவெடுப்பது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம், (தி.பணிகள் 6:1-7), திருஅவை வரலாற்றில் எழுந்த முதல் நெருக்கடியை இவ்வாறு விளக்குகிறது: அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். (தி.ப. 6:1)

இந்த நெருக்கடியைத் தீர்க்க, திருத்தூதர்கள் பின்பற்றிய வழிகள் அழகானவை. அவர்கள், அனைத்து சீடர்களையும் ஒருங்கே வரவழைத்து, இந்தப் பிரச்சனையை அவர்கள் முன் வைத்தனர். தங்கள் சமுதாயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்று முணுமுணுத்தவர்களிடமே, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அழைப்பு விடுத்தனர்.

கூடிப் பேசுதல், பிரச்சனையை சொன்னவர்களிடமே தீர்வையும் காணச்சொல்லி தூண்டுதல் ஆகியவை, வயதில் முதிர்ச்சி பெற்றவர்கள் பின்பற்றும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள். இவற்றை, நம் சொந்த வாழ்வில் பின்பற்றுகிறோமா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளலாம். நம் குடும்பங்களில் உருவாகும் குறைகளைப் பற்றிய முணுமுணுப்பு எழும்போது, நாம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?

இன்றைய முதல் வாசகத்தின் ஆரம்ப இறைவாக்கியத்தையும், இறுதி இறைவாக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும்போது, அழகியதோர் எண்ணம் மனதில் பதிகிறது. "அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது" என்று ஆரம்பமாகும், இப்பகுதி, "கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது" என்று நிறைவடைகிறது.

எந்த ஒரு அமைப்பும், எண்ணிக்கையில் மட்டும் கூடினால், அங்கு ஒருவேளை, பல்வேறு உரசல்களும், முணுமுணுப்புக்களும் உருவாகலாம். அப்படி உருவாகும் சவால்களை, முதிர்ச்சி பெற்ற மனநிலையுடன் அணுகும்போது, அவ்வமைப்பில் இணைவோரின் எண்ணிக்கை கூடும் என்பதையும், அந்த அமைப்பில், கடவுளின் வார்த்தைக்கு முதலிடம் வழங்கப்பட்டால், உண்மையான வளர்ச்சி அங்கு நிலவும் என்பதையும், இந்த முதல் வாசகம் தெளிவாக்குகிறது.

நெருக்கடியான ஒரு சூழலில், இயேசு, தன் சீடர்களிடம் கூறிய நம்பிக்கை வரிகள் இன்றைய நற்செய்தியின் வழியே நம்மை அடைந்துள்ளன. நம் வாழ்வில், நெருக்கடிகள் பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச்சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரிய வரும், பின்னர் இவை பிறருக்கும் தெரிய வரும்.

உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகிய ஒரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான், உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தன் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி, நம்மில், எத்தகைய பண்புகளை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதைச் சிந்திப்பது நல்லது. இந்தச் சூழலில், இன்று நம்மை வந்தடைந்துள்ள நற்செய்தி, இயேசு தன் உண்மை இயல்பை வெளிப்படுத்தும் கூற்றுகளை நமக்கு வழங்குகிறது.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே"... என்று இயேசு, தன் உண்மை இயல்பின் ஒரு சில அம்சங்களை, இன்றைய நற்செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். இயேசு, இந்த வார்த்தைகளை, அமைதியாக, ஒரு புன்முறுவலுடன், இலேசான ஒரு பெருமையுடன், கம்பீரமாகச் சொல்லவில்லை. இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக் கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் இந்தக் கலக்கமானச் சூழலைத் தெளிவாக்குகின்றன.

யோவான் நற்செய்தி 14: 1-6

இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.... நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார். தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே”என்றார்.

சீடர்களின் உள்ளக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? இயேசு அப்போதுதான் அவர்களிடம் இரு பெரும் கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார். பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார் என்றும், மற்றொரு சீடர், இயேசுவைத் தனக்குத் தெரியாது என மறுதலிப்பார் என்றும், இயேசு கூறிய இரு கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த சீடர்களின் மனஉறுதியைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இயேசு வருங்காலத்தைப் பற்றி, வருங்காலத்தில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் வாழப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றி பேசுகிறார். அந்த இல்லம் எங்குள்ளது, அதற்குச் செல்லும் வழி என்ன என்று கேட்கும், தோமாவிடம், இயேசு, காலத்தால் அழியாத அற்புத சொற்களை வழங்குகிறார்: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே”. இதுதான் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.

நம்பிக்கையிழந்து, சோர்வுற்ற சீடர்களின் உள்ளங்களில் நம்பிக்கையை வழங்க, ஓர் அன்னையின் கனிவோடு, அவர்களிடம், வருங்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்க்கும்வண்ணம் பேசினார். இந்த குழப்பமான, நெருக்கடியான காலத்தில், இயேசு, நம் உள்ளங்களிலும், நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்று மன்றாடுவோம். அவரே, நமக்கும், வழியாக உண்மையாக, வாழ்வாக இருக்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

இறுதியாக, இந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் அன்னை தினத்தைப் பற்றிய ஒரு சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். இந்தியா, இலங்கை உட்பட, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில், மே மாதத்தின் 2ம் ஞாயிறு, அன்னை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம், 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe அவர்கள், 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான அக்கவிதை, உலகெங்கும், அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. அக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மை ஆகியப் பண்புகள், நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. இதோ, அக்கவிதையின் சில வரிகள்:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!

உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.

பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்கமாட்டோம்.

ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவுகொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்திருந்த காலத்தில், Julia Ward அவர்கள், இந்தக் கவிதையை எழுதினார். 150 ஆண்டுகளுக்குமுன், 1870ம் ஆண்டு, இரணமான, கனமான இதயத்துடன் அவர் எழுதிய வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள போர்கள், சுற்றுச்சூழல் சீரழிவு, சமுதாயப் பாகுபாடுகள் போன்ற அவலங்களை நினைவுறுத்துகின்றன.

சக்தியற்ற, மென்மையான உருவமாகத் தோன்றும் அன்னையரின் வீரம், தியாகம் ஆகிய சக்திநிறைந்த பண்புகள், நெருக்கடி வேளைகளில் வெளிப்படுவதை உணர்ந்துள்ளோம். இவ்வுலகை ஒரு போர்க்களமாக மாற்றி, பல்லாயிரம் உயிர்களை பறித்துள்ள கோவிட் 19 தொற்றுக்கிருமியின் பிடியிலிருந்து மக்களைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான செவிலியர், மருத்துவப்பணியாளர்கள், துப்புரவு தொழிலாளிகள், காவல் துறையினர் ஆகியோர் மனித சமுதாயத்தைக் காக்கும் அன்னையர்களாக விளங்குகின்றனர். அவர்கள் அனைவரையும் இறைவனின் சந்நிதியில், இந்த அன்னை தினத்தன்று, நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2020, 12:02