தேடுதல்

Vatican News
ஈரான் கோவில் ஈரான் கோவில் 

கொள்ளை நோயை எதிர்த்துப் போரிட ஒத்துழைப்பு

WCC: ஈரானுக்கு எதிரான தடைகள் மேலும் தொடர்வது சட்ட விரோதமானதாகவும், மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கோவிட-19 தொற்றுநோயால் உலகமே அவலங்களைச் சந்தித்துவரும் இன்றையச் சூழலில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, WCC எனும் உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

உலகின் பொது எதிரியான இந்த கொள்ளை நோயை எதிர்த்துப் போரிட, ஒருமைப்பாடும் ஒத்துழைப்பும் தேவைப்படும் இவ்வேளையில், இஸ்லாமிய குடியரசான ஈரானுக்கு எதிரான தண்டனையாக இருக்கும் தடைகள் மேலும் தொடர்வது, சட்ட விரோதமானதாகவும், மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது என்கிறது WCC அமைப்பு.

மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டும், நாலாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகியும் உள்ள நிலையில், இந்நாட்டிற்கு எதிரான தடைகளைத் தொடர்வது மனிதாபிமானமற்றது எனக் கூறும் இந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு, இன்று தேவைப்படுவது உலக அளவிலான ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் எனவும் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

2019ம் ஆண்டு மே மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடு விதித்த பொருளாதாரத் தடைகளால், மருத்துவப் பணிகளும், அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளது, உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு. (AsiaNews)

14 April 2020, 14:09