தேடுதல்

Vatican News
வெனெசுவேலாவிற்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோர் வெனெசுவேலாவிற்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

வெனெசுவேலா திரும்புவோரை வரவேற்க ஊக்கமளிப்பு

எல்லைப் பகுதியிலிருந்து திரும்பும் மக்களை வரவேற்பதை ஊக்குவிப்பதற்கென, "அதைப் பற்றி கவலையில்லை, அவர் என் உடன்பிறப்பு" என்ற நடவடிக்கையைத் துவக்கியுள்ள வெனெசுவேலா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொலம்பியா நாட்டிலிருந்து வெனெசுவேலா நாட்டிற்குச் சென்றுகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த மக்களை, உடன்பிறந்த உணர்வில் வரவேற்குமாறு, வெனெசுவேலா தலத்திருஅவை அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

Alto Apure என்ற எல்லைப் பகுதியிலிருந்து திரும்பும் மக்களை வரவேற்பதை ஊக்குவிப்பதற்கென, "அதைப் பற்றி கவலையில்லை, அவர் என் உடன்பிறப்பு" என்ற நடவடிக்கையைத் துவக்கியுள்ள, அந்நாட்டு Guasdualito மறைமாவட்ட ஆயர் Pablo Modesto அவர்கள், தேவையில் இருப்பவர் யாராய் இருந்தாலும், அவர்கள் மீது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னலத்திலும், மற்றவரைப் புறக்கணித்து தன்னைப் பராமரிப்பதிலுமே கவனம் செலுத்துவதில் அதிகம் வளர்ந்துவிடாமல் இருப்பதற்கு, நாம் வாழ்ந்துவரும் இன்னல் நிறைந்த இக்காலம், ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், ஆயர்  Modesto அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

வெனெசுவேலா மக்கள், இயல்பிலே விருந்தோம்பல் பண்புள்ளவர்கள், இதைப் பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறிய ஆயர்  Modesto அவர்கள்,  ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 250 பேர், மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.   

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலா அரசின் விதிமுறைப்படி, இவ்வாறு நாட்டுக்குள் நுழைகிறவர்கள், 14 நாள்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டும், அதற்குப்பின, அவர்கள் மற்ற நகரங்களுக்கு இடம்பெயரலாம் என்றும், ஆயர் கூறினார்.

வெனெசுவேலா நாட்டு Guasdualito மறைமாவட்டமும், கொலம்பியா நாட்டு Arauca மறைமாவட்டமும் இணைந்து, நாட்டிற்குள் வருகின்ற புலம்பெயர்ந்த மக்களை வரவேற்கும் நடவடிக்கையை ஆற்றுகின்றன. (Fides)

30 April 2020, 15:18