தேடுதல்

Vatican News
பல்கேரியாவில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது.. பல்கேரியாவில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது..  (AFP or licensors)

அமெரிக்கா, கனடா திருஅவைகள் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பு

அன்னை மரியாவுக்கு “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது வழங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த கோவிட்-19 பரவல் காலத்தில், கனடா நாட்டையும், அமெரிக்க ஐக்கிய நாட்டையும் ஒரே நேரத்தில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்துள்ளனர், அந்நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள்.

வருகிற மே மாதம் முதல் தேதி கனடா நாட்டு ஆயர்கள், தங்கள் நாட்டை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ள அதே நேரத்தில், தங்கள் நாட்டையும் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்குமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Gomez அவர்கள், அனைத்து ஆயர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏப்ரல் 22, இப்புதனன்று, Los Angeles பேராயர் Gomez அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் எல்லாருக்கும் அனுப்பியுள்ள மடலில், “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரில், மே மாதம் முதல் தேதி, அந்நாட்டில் பகல் 12 மணிக்கு, நாட்டை அன்னை மரியாவுக்கு மீண்டும் அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் திருஅவை, கடவுளின் அன்னையிடம் சிறப்பு வேண்டுதல்களை எழுப்புகின்றது என்றும், உலக அளவில் கொள்ளை நோயை எதிர்கொள்ளும் இவ்வாண்டில், அன்னை மரியாவின் உதவியை உருக்கமாக மன்றாடுவோம் என்று, தனது மடலில் குறிப்பிட்டுள்ளார், பேராயர் Gomez.

கனடா நாட்டு ஆயர்களும், இதே நாளில், இதே பெயரில், கனடாவை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.  

இத்தாலிய ஆயர்களும் அதே நாளில் இத்தாலி நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக, ஏப்ரல் 20ம் தேதி அறிவித்துள்ளனர்.

அன்னை மரியாவுக்கு “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மரியா, திருஅவையின் அன்னை” என்ற விழாவை, திருஅவையின் திருவழிபாட்டு நாள்காட்டியில், 2018ம் ஆண்டு இணைத்தார். (CNA)

24 April 2020, 14:13