தேடுதல்

இயேசு அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார். - மத். 9,29 இயேசு அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார். - மத். 9,29 

விவிலியத்தேடல்: பார்வையற்ற இருவர் குணமடைதல்

இவ்வுலகில், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ச்சியால் தளர்வுற்றோர் அனைவரும், மற்றொரு மனிதத் துணையைப் பெறுவதன் வழியே, ஆறுதலும், ஆற்றலும் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: பார்வையற்ற இருவர் குணமடைதல்

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், கடந்த ஆண்டு நம் தேடல்களைத் துவக்கினோம். இந்த மூன்று நற்செய்திகளிலும், ஏறத்தாழ ஒரே விதத்தில் பதிவாகியுள்ள 12 பொதுவானப் புதுமைகளில் நம் தேடல்கள் ஆரம்பமாயின. அவற்றைத் தொடர்ந்து, இம்மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரு நற்செய்திகளில் மட்டும் இடம்பெற்றுள்ள 5 புதுமைகளின் பக்கம் நம் கவனம் திரும்பியது.

இந்த வாரம் முதல், இந்த மூன்று நற்செய்திகள் ஒவ்வொன்றிலும், வேறு எந்த நற்செய்தியிலும் பதிவு செய்யப்படாத தனித்துவமான புதுமைகளில் நம் பயணத்தை துவக்குகிறோம். தனித்துவமான புதுமைகள் என்ற கண்ணோட்டத்துடன் தேடும்போது, மத்தேயு நற்செய்தியில் 2 புதுமைகளும், மாற்கு நற்செய்தியில் 2 புதுமைகளும், லூக்கா நற்செய்தியில் 5 புதுமைகளும் பதிவாகியுள்ளதைக் காண்கிறோம்.

பார்வையற்ற இருவரும், பேச்சுத்திறனை இழந்த ஒருவரும் குணமாவது, மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இரு தனித்துவமானப் புதுமைகள். இவை, வேறு எந்த நற்செய்தியிலும் இடம்பெறவில்லை. 9ம் பிரிவின் இறுதிப்பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பதிவாகியுள்ள இப்புதுமைகளை, இயேசு, தன் பணிவாழ்வின் துவக்கத்தில் செய்ததாக மத்தேயு கூறியுள்ளார்.

நற்செய்தியாளர் மத்தேயு, 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில், இயேசுவின் படிப்பினைகளை, தொகுத்து வழங்கியுள்ளார். அந்த மூன்று பிரிவுகளைத் தொடர்ந்து, 8.9 ஆகிய இரு பிரிவுகளில், இயேசு ஆற்றிய ஒரு சில புதுமைகளை, பதிவு செய்துள்ளார். தொழுநோயாளர், நூற்றுவர் தலைவரின் பையன், பேதுருவின் மாமியார், பேய் பிடித்த இருவர், முடக்குவாதமுற்றவர், இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தொழுகைக்கூடத் தலைவரின் மகள் ஆகியோரை இயேசு குணமாக்கும் ஏழு புதுமைகள், இவ்விரு பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. இதே ஏழு புதுமைகளை, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் ஆகிய நற்செய்திகளிலும், ஒரு சில வேறுபாடுகளுடன் நாம் வாசிக்கிறோம். இந்த ஏழு புதுமைகளைத் தொடர்ந்து, 9ம் பிரிவின் இறுதிப் பகுதியில், பார்வையற்ற இருவரையும், பேச்சிழந்த ஒருவரையும் இயேசு குணமாக்கும் புதுமைகளை, நற்செய்தியாளர் மத்தேயு மட்டும் பதிவு செய்துள்ளார்.

இவ்விரு புதுமைகளையும் மத்தேயு நற்செய்தியிலிருந்து செவிமடுப்போம்:

மத்தேயு 9:27-35

இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரை, சிலர், அவரிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர். ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

பார்வையற்ற இருவரை இயேசு குணமாக்கிய அந்தப் புதுமையில் கூறப்பட்டுள்ள அறிமுக வரிகள், நமக்குள் ஒரு சில எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள், நாம் வாழ்ந்துவரும் இந்த சிக்கலானச் சூழலில் அர்த்தமுள்ள வரிகளாகத் தெரிகின்றன. இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். (மத. 9:27) என்பன அந்த அறிமுக வரிகள்.

பார்வையற்ற இருவர், இயேசுவிடம் வருதல், அவர்கள் ஒரே விதமாக தங்கள் விண்ணப்பத்தை வெளியிடுதல், இயேசு கேட்ட கேள்விக்கும் ஒரே விதமாகப் பதில் சொல்லுதல் என்பதையெல்லாம் வாசிக்கும்போது, நோயுற்றவர்கள் எவ்விதம் ஒருவருக்கொருவர் துணையாக முடியும் என்பதை உணரலாம். அதிலும், பார்வையற்ற இவ்விருவரும் ஆதரவு ஏதுமின்றி, தெருக்களில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர்கள் என்பதால், ஒருவர் மற்றவருக்குத் தந்த துணை, ஆறுதலும், ஆற்றலும் தந்திருக்கும்.

நாம் வாழும் பகுதிகளில், பார்வையற்றோர் தர்மம் கேட்டு வரும்போது, கூடவே, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது, ஒரு நண்பர் உடன் வருவதைப் பார்த்திருக்கிறோம். பல வேளைகளில், துணையாக வருபவரும் பார்வையற்றவராக இருப்பதையும் பார்த்திருக்கிறோம். பார்வையற்றோர் பலர், அன்றைய நாள் முடிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடிவந்து, பேசி, சிரித்து, ஏன்... பாடல்கள் பாடி மகிழ்ந்திருப்பதையும் நாம் பார்த்திருக்கக்கூடும். இந்தச் சூழல்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது இதுதான்: துன்புறும் வேளையில், நோயுறும் வேளையில், குறையுடன் வாழும் வேளையில், மற்றொருவரின் துணை நமக்கு உண்டு என்ற உணர்வு, ஒருவருக்குள் ஏராளமான ஆறுதலையும், ஆற்றலையும் தரும் என்பதே, நமக்கு உணர்த்தப்படும் பாடம்.

இயேசுவைத் தேடி வந்த பார்வையற்றோர் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்ததோடு, ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும் வாழ்ந்திருக்கவேண்டும். இயேசு என்ற போதகரைப்பற்றி, அவ்விருவரும் வெவ்வேறு தருணங்களில் கேட்டறிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்திருக்கவேண்டும். அவர்கள் பகிர்ந்துகொண்ட எண்ணங்களின் விளைவாக, அவர்களுக்குள் இயேசுவைக்குறித்த நம்பிக்கை வளர்ந்திருக்கவேண்டும். அந்த நம்பிக்கையே, 'தாவீதின் மகனே' என்ற அடைமொழியில் ஒரு விசுவாச அறி்க்கையாக வெளியானது.

பார்வையற்ற இருவரை குணமாக்கிய இப்புதுமையைத் தொடர்ந்து உடனடியாக நாம் காண்பது, 'பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரை' இயேசு குணமாக்கியப் புதுமை. இப்புதுமையிலும், நோயுற்ற அம்மனிதரை சிலர், அதாவது, அவரது உறவினர் அல்லது நண்பர்கள், இயேசுவிடம் கொண்டுவந்தனர் (மத். 9:32) என்று வாசிக்கிறோம்.

இயேசு ஆற்றிய பெரும்பாலான புதுமைகளில், நோயுற்றோரை, அவரது உறவினர்களோ நண்பர்களோ இயேசுவிடம் கொணர்ந்ததைக் காண்கிறோம். முடக்குவாதமுற்ற ஒருவரை, கட்டிலோடு சுமந்துவந்து, கூரை வழியே அவரை இயேசுவுக்குமுன் இறக்கிய அந்நிகழ்வில், (மத். 9:1-8; மாற். 2:1-12; லூக். 5:17-26) இந்த உறவின் உச்சக்கட்டத்தை நாம் சிந்தித்தோம். இன்னும் சில புதுமைகளில், நோயின் காரணமாக, உறவுகளும், நண்பர்களும் விலகிப்போனச் சூழலில், நோயுற்றவர்களே ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர் என்பதற்கு, பார்வையற்ற இருவர் இயேசுவிடம் வந்த இந்தப் புதுமையும், பத்து தொழுநோயாளிகள் (லூக்கா 17:11-19) இயேசுவைத் தேடிச்சென்ற புதுமையும் எடுத்துக்காட்டுகள்.

நம்மைச் சூழ்ந்து அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைகளில், அல்லது, வயதுமுதிர்ந்தோர் காப்பகங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை இவ்வேளையில் எண்ணிப்பார்ப்போம். இவர்களில் ஒரு சிலர், தனிமைப்படுத்தப்பட்ட அச்சூழலிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர் என்பதையும், வேறு சிலர், தங்கள் வீடுகளுக்குத் திரும்பி, உறவுகள் நடுவில் இறந்தால் போதும் என்று கூறியுள்ளதையும் நாம் செய்திகளில் வாசிக்கிறோம்.

பார்வையற்றவர் இருவர் இயேசுவை அணுகி வந்து குணமடைந்தனர் என்ற நிகழ்வைச் சிந்திக்கும்போது, இவ்வுலகில், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ச்சியால் தளர்வுற்றோர் அனைவரும், மற்றொரு மனிதத் துணையைப் பெறுவதன் வழியே, ஆறுதலும், ஆற்றலும் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். குறிப்பாக, இந்தத் தொற்றுக்கிருமி உருவாக்கியிருக்கும் அளவு கடந்த அச்சம் காரணமாக, தனிமையில் வேதனையுறும் அனைவருக்கும், ஏதோ ஒருவகையில் ஆறுதலாக இருக்க, இறைவன், நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று செபிப்போம்.

இவ்விரு புதுமைகளின் இறுதியில், நற்செய்தியாளர் மத்தேயு பதிவுசெய்துள்ள ஆறுதலான வரிகள், இன்று, உலகின் பல பகுதிகளில் உண்மையாகவேண்டும் என்ற வேண்டுதலுடன், அந்த இறுதி வரிகளுக்கு செவிமடுப்போம்:

இயேசு, நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். (மத். 9:35)

28 April 2020, 14:31